ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை
ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சிறுமி கர்ப்பம்
தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா அடஞ்சூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் வீரபாண்டி (வயது24). டிரைவர். இவர் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு துணிக்கடைக்கு துணி எடுக்க சென்றபோது அங்கே வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இவர்கள் 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசியதால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.
இதனால் அந்த சிறுமியின் வீட்டிற்கு வீரபாண்டி செல்ல தொடங்கினார். அந்த நேரத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் வீரபாண்டி மிக நெருக்கமாக இருந்தார். அடிக்கடி இதுபோன்று தனிமையில் இருந்ததால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இந்த விவரத்தை வீரபாண்டியிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினார்.
போலீசில் புகார்
ஆனால் தனக்கு கும்பகோணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் ஆகி, அவர் 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என அந்த சிறுமியிடம் வீரபாண்டி கூறினார். இதனால் அந்த சிறுமி அதிர்ச்சி அடைந்தார். இந்தநிலையில் திடீரென அந்த சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் பெற்றோர் தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அந்த சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர், வீரபாண்டியை சந்தித்து தன் மகளை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினர். ஆனால் தனக்கு திருமணம் ஆகிவிட்டதால் உங்கள் மகளை திருமணம் செய்ய முடியாது என மறுத்துவிட்டார். இதையடுத்து திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்தார். அதில் திருமண ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி தன்னுடன் நெருக்கமாக இருந்து கர்ப்பமாக்கிய வீரபாண்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
20 ஆண்டுகள் சிறை
இதையடுத்து வீரபாண்டியை போலீசார் கைது செய்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சுந்தரராஜ் விசாரித்து வீரபாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர், பாதிக்கப்பட்டசிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்தார். அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.