வாலிபருக்கு 20 ஆண்டு சிறை


வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
x
திருப்பூர்


திருப்பூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

சிறுமியை கடத்தி திருமணம்

திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் வள்ளிபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 23). இவர் கடந்த 2021-ம் ஆண்டு 13 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூர் கடத்திச்சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தார். முதலில் மாணவி மாயமானதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

அதன்பிறகு விசாரணையில் பாலசுப்பிரமணி, மாணவியை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச்சென்றது, குழந்தை திருமணம் செய்தது, போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

20 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமியை கடத்திச்சென்ற பிரிவுக்கு 5 ஆண்டுகள் சிறை, போக்சோ பிரிவுக்கு 20 ஆண்டு சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம், குழந்தை திருமணம் செய்த குற்றத்துக்கு 2 ஆண்டு சிறை சிறை தண்டனை விதித்தும், இந்த தண்டனையை பாலசுப்பிரமணி ஏக காலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பாராட்டினார்.


Next Story