காளை விடும் விழாவில் 200 மாடுகள் பங்கேற்பு
வேப்பம்பட்டில் நடந்த காளை விடும் விழாவில் 200 மாடுகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடின.
காளைவிடும் விழா
கணியம்பாடியை அடுத்த வேப்பம்பட்டு கிராமத்தில் காளை விடும் விழா நேற்று நடந்தது. வண்ண வண்ண பூக்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வரப்பட்ட காளைகளுக்கு, காலை 7 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். கணியம்பாடி ஒன்றியக் குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், கணியம்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் கலைச்சந்தர், ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி வார்டு உறுப்பினர் இளங்கோவன் வரவேற்றார்.
காலை 10 மணி அளவில் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை தொடர்ந்து காளை விடும் விழா தொடங்கியது. விழாவில் வேலூர், அணைக்கட்டு, ஊசூர், பென்னாத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. கால்நடை மருத்துவ குழுவிரின் பரிசோதனைக்கு பின்னர் மாடுகள் ஒவ்வென்றாக வீதியில் அவிழ்த்து விடப்பட்டது. தெருவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து விரட்டினர்.
5 பேர் காயம்
முதல்பரிசாக ரூ.60 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் உள்பட மொத்தம் 51 பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் மாடுகள் முட்டியதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சைகள் அளித்தனர். வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் துணை தாசில்தார் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் சந்தியா, வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.