தஞ்சையில் முதல்முறையாக 200 நாய்கள் பங்கேற்ற கண்காட்சி
தஞ்சையில் முதல்முறையாக 200 வகையான உள்நாடு மற்றும் வெளிநாடு நாய்கள் பங்கேற்ற கண்காட்சி நடைபெற்றது. இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டுகளித்தனர்.
தஞ்சையில் முதல்முறையாக 200 வகையான உள்நாடு மற்றும் வெளிநாடு நாய்கள் பங்கேற்ற கண்காட்சி நடைபெற்றது. இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டுகளித்தனர்.
நாய்கள் கண்காட்சி
தஞ்சை, மாதாக்கோட்டை பகுதியில் உள்ள மிருகவதை தடுப்பு சங்கத்தில், கால்நடை பராமரிப்புதுறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து, நாய்கள் கண்காட்சியினை நடத்தின. தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக நடந்த இந்த நாய்கள் கண்காட்சியை, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சியில், சிம்பா, அலங்கு, டாபர்மேன், லேபர் டாக், கிரேடன், ஜெர்மன் ஷெப்பர்ட், சிப்பி பாறை, டாடர்மேன், லபரடார், ஜெர்மன் ஷெப்பரட், கோம்பை, கண்ணி, கட்டைக்கால், மண்டைநாய், ரோட்வீய்லர், பொமேரனியன், டால் மெட்டியன், பூடில் சைபீரியன், ஹஸ்கி, காக்கர் ஸ்பேனியல் உள்ளிட்ட வகைகளை சேர்ந்த 200 வகையான நாய்கள் பங்கேற்றன.
போலீஸ் மோப்ப நாய்கள்
இது தவிர சீனா உள்ளிட்ட வெளிநாட்டு இன வகைகளை சேர்ந்த நாய்களும் கலந்து கொண்டன. போலீஸ் மோப்ப நாய்களும் பங்கேற்றன.
மேலும் வெளிநாட்டு பறவை இனங்கள், பெரிய வகை சிலந்தி, பாம்பு, மீன் வகைகள் உள்ளிட்டவையும் இடம் பெற்றன. இக்கண்காட்சியினை பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் ரசித்தனர்.
கண்காட்சியில் உரிமையாளர்களின் கட்டளைக்கு ஏற்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி, அணிவகுப்பு, தனி திறன் போட்டிகள் நடந்தது. அதன்படி, சிறந்த நாய்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.