200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீஸ் வினியோகம்
வேலூரில் 200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
வேலூரில் 200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்பு வீடுகள்
வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் செய்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வேலூர் மாநகராட்சியில் பலவன்சாத்து ஏரி பகுதியில் பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் அங்கு சென்று அளவீடு செய்தனர். அதில் சுமார் 200 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.
200 வீடுகளுக்கு நோட்டீஸ்
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் தற்போது 200 வீடுகளுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த நோட்டீசில், குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் உள்ள பொருட்களை தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சி சார்பில் அகற்றப்படும்போது பொருட்கள் திருப்பி தரப்படாது என்றும் கூறியிருந்தனர்.
ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் இந்த மாத இறுதியில் அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.