தூத்துக்குடி கடைகளில் 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


தூத்துக்குடி கடைகளில் 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கான தடை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கான தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பிளாஸ்டிக் தடை அமல்

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், பாலத்தீன் பைகள் போன்றவை பயன்பாட்டுக்கு தமிழகத்தில் ஏற்கனவே தடை உள்ளது. இருப்பினும் எந்த தடிமன் வரையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம் என்பதில் குழப்பம் இருப்பதால் பல கடைகள், வணிக நிறுவனங்களில் பாலீத்தீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் ஜூலை 1-ம் தேதி முதல் முழுமையாக தடை செய்யப்படும் என கடந்த 29-ம் தேதி நடந்த மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான முழுமையான தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

கடைகள், ஓட்டல்களில் சோதனை

இதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று மாநகராட்சி பகுதி முழுவதும் அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில் மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார் தலைமையில் சுகாதார அலுவலர்கள் கடைகளில் சோதனை நடத்தினர். மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கும் தலா 2 குழுக்கள் அமைக்கப்பட்டு மாநகராட்சி பகுதி முழுவதும் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஓட்டல், டீக்கடை, மளிகை கடை, துணிக்கடை உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளிலும் மாநகராட்சி அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

200 கிலோ பறிமுதல்

இந்த சோதனையின் போது சுமார் 200 கிலோ எடை கொண்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், உணவு பொருட்களை பொட்டலமிடும் உறைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படும். எனவே, வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story