வளவனூர் அருகேரேஷன் கடையில் 200 பாமாயில் பாக்கெட்டுகள் திருட்டு
வளவனூர் அருகே ரேஷன் கடையில் 200 பாமாயில் பாக்கெட்டுகள் திருடிச் சென்ற மா்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வளவனூர்,
வளவனூர் அருகே சாலையாம்பாளையம் காலனி பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் விற்பனையாளராக சிராஜிதீன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை இக்கடைக்கு லாரி மூலம் அத்தியாவசிய பொருட்கள் வந்திறங்கியுள்ளது. அந்த பொருட்கள் அடங்கிய மூட்டைகளை கடைக்குள் வைத்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை அக்கடையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து திடுக்கிட்டனர். உடனே இதுபற்றி அவர்கள், கடையின் விற்பனையாளர் சிராஜிதீனுக்கு தெரிவித்தனர். அதன்பேரில் அவர், கடைக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது கடையினுள் வைத்திருந்த 20 அட்டைப்பெட்டிகளில் இருந்த 200 பாமாயில் பாக்கெட்டுகள் திருட்டுப்போய்இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பாமாயில் பாக்கெட்டுகளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.