காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்


காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்
x

ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு புனித தலம் இருக்கிறது. வாழ்க்கையில் ஒருமுறையாவது அங்கு சென்றுவர வேண்டும் என்பது அவரவர் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

ராணிப்பேட்டை

ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு புனித தலம் இருக்கிறது. வாழ்க்கையில் ஒருமுறையாவது அங்கு சென்றுவர வேண்டும் என்பது அவரவர் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

இந்துக்கள் காசி செல்வதை புண்ணியமாக கருதுகிறார்கள். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதை பெருமையாக சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் 'ஹஜ்' பயணத்தை கடமையாக கொள்கிறார்கள்.

வசதிபடைத்தவர்கள் நினைத்த மாத்திரத்தில் மேற்சொன்ன புனித தலங்களுக்கு சென்று வந்துவிடுகிறார்கள்.

வசதி குறைந்தவர்களால் அவ்வாறு செல்லமுடிவது இல்லை.

அரசு ஏற்பாடு

அவ்வாறு வசதி இல்லாதவர்கள் புனித தலங்களுக்கு சென்றுவர அரசாங்கம் உதவி வருகிறது.

ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 550 பேர் அரசு நிதி உதவியுடன் ஜெருசலேம் சென்று வருகிறார்கள். தமிழக அரசின் மானிய உதவியுடன் இஸ்லாமியர்கள் 'ஹஜ்' பயணம் செல்கிறார்கள்.

அதுபோல் இந்துக்கள் 500 பேர் ஆண்டுதோறும் மானசரோவர், முக்திநாத் ஆகிய தலங்களுக்கு சென்றுவர உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2012-ம் ஆண்டு அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அதற்கான திட்டத்தை தொடங்கிவைத்தார்.

காசி ஆன்மிக பயணம்

இந்தநிலையில் கடந்த மே மாதம் சட்டசபையில் நடந்த இந்துசமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை அறிவிப்பில், "காசிக்கு ஆன்மிக பயணமாக 200 பேர் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்ற தகவல் வெளியானது. அதற்கான செலவு ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதை நடைமுறைப்படுத்தும் விதமாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், 'ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு, தமிழ்நாட்டில் உள்ள 20 மண்டலங்களில் 200 பேர் ஆன்மிக பயணத்துக்கு ராமேசுவரம் கோவில் நிர்வாகத்தின் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். தகுதிவாய்ந்தவர்கள் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அந்தந்த மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உள்ளவராகவும், 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இந்த ஆண்டு காசி புனித பயணத்துக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 200 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்பட இருக்கிறது' என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் இந்த ஆன்மிக பயண திட்டத்தை மக்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

கூடுதல் பக்தர்கள்

காங்கேய நல்லூரை சேர்ந்த வி.பி.ரவி:-

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காசிக்கு புனித யாத்திரையாக பக்தர்களை அழைத்து செல்லும் திட்டம் வரவேற்கத்தக்கது. தமிழகம் முழுவதிலும் இருந்து 200 நபர்கள் மட்டுமே அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ஆனால் காசிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்ல விருப்பம் தெரிவித்து விண்ணப்பிப்பார்கள். இதில் எவ்வாறு பக்தர்களை தேர்வு செய்ய உள்ளனர் என்பது தெரியவில்லை. வயது அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மேலும் தமிழகம் முழுவதிலும் இருந்து கூடுதலாக பக்தர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். ஏராளமான கோவில்கள் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை இதற்கென்று தனியாக ஒதுக்க வேண்டும்.

ஆரணியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் எஸ்.நாகராஜன்:-

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் எத்தனை தாலுகாக்கள் உள்ளன என்பதை அரசு தெரிவிக்க வேண்டுகிறேன். ஒரு மண்டலத்திற்கு 10 பேர் என்றால் ஒரு தாலுகாவுக்கு ஒரு நபர் மட்டுமே என்ற பெயரளவுக்கு அழைத்துச் செல்லும் இந்த பயணத்தை எப்படி வரவேற்க முடியும். ஒவ்வொரு தாலுகாவிற்கும் 10 பேர் வீதம் தேர்வு செய்யப்பட வேண்டும். அதுவும் 60 வயதுக்கு மேல் 70 வயதுக்குட்பட்டோர் என குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் இணை ஆணையர் அலுவலகத்தில் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்பொழுது எல்லாம் அழைத்துச் செல்வார்கள் என்பதை இதுவரை தெரிவிக்க வில்லை. இது போன்ற குளறுபடிகளை முதலில் தெளிவு படுத்தி அரசு அறிவிக்க வேண்டும்.

வயதை குறைக்க வேண்டும்

ரத்தினகிரியை சேர்ந்த டி.சிவனார் அமுது:- தமிழக அறநிலையத் துறை சார்பில் 200 பக்தர்களை காசிக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒரு விஷயமாகும். இந்துக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இதில் 60 வயது முதல் 70 வயது வரை இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். அதை 50 வயது முதல் 75 வயது வரை உள்ளவர்களை அழைத்துச் சென்றால் நன்றாக இருக்கும். நிறைய பேருக்கு காசிக்கு சென்று வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் போதுமான பண வசதி இருக்காது. ஆகையால் இந்த திட்டம் நல்ல திட்டம் ஆகும். 200 பக்தர்கள் என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையாகும். குறைந்தபட்சம் 500 முதல் 1,000 பேரையாவது அழைத்துச் சென்றால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள மற்ற கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.

திருவண்ணாமலையை சேர்ந்த மோகன் சாது:- தமிழக அரசின் மூலம் காசிக்கு புனித யாத்திரை அழைத்துச் செல்லும் திட்டம் வரவேற்கத்தக்கது. இத்திட்டத்தின் மூலம் 200 பேரை அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. அரசு குறைந்தபட்சம் 1,000 பேரை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசே ஏற்பாடு செய்ய வேண்டும். புனித யாத்திரை செல்பவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த புனித யாத்திரை மேற்கொள்ளும் நபர்களை நேர்மையான முறையில் அரசு தேர்வு செய்து அழைத்துச் செல்ல வேண்டும். ஊனமுற்றோர் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுடன் துணைக்கு ஒருவரை அழைத்து செல்ல அரசு பரிந்துரைக்க வேண்டும்.

வரப்பிரசாதம்

திருப்பத்தூரை சேர்ந்த எஸ்.திருவரங்கன்:- ஒரு மண்டலத்துக்கு 10 பேர் என 20 மண்டலத்துக்கு 200 பேர் மட்டுமே அழைத்துச் செல்வது மிக மிக குறைவாகும். இதனை ஒரு மண்டலத்திற்கு குறைந்தது 50 பேரையாவது அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 60 வயது என நிர்ணயம் செய்வதை கைவிட்டு 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களையும் காசிக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பயனாளிகளை தேர்வு செய்யும் போது ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ள வசதி வாய்ப்பு குறைந்தவர்களை அழைத்துச் செல்ல முன்னுரிமை வழங்க வேண்டும். காசிக்கு அழைத்துச் செல்லும் அரசின் இந்த முடிவு இந்து மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

குடியாத்தம் கூட நகரம் கிராமத்தை சேர்ந்த சிவத்தொண்டர் சிவ.திருநாவுக்கரசு:- தமிழகத்திலிருந்து காசிக்கு புனித யாத்திரைக்கு 200 பேர் அழைத்துச் செல்லப்படுவதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 234 தொகுதி உள்ளது. தொகுதிக்கு ஒருவர் கூட இல்லாமல் 200 பேரை மட்டும் அழைத்துச் செல்வது என கூறுவது சரியானதாக இல்லை. குறைந்தபட்சம் ஒரு தொகுதிக்கு 10 முதல் 50 நபர்களை காசி புனித யாத்திரைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். திருவேணி சங்கமம், கேதார்நாத், பத்ரிநாத், கைலாயம், கங்கோத்திரி, யமுனோத்திரி உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கும் பக்தர்களை அழைத்துச் செல்ல வேண்டும். இதற்காக ரூ.50 லட்சம் ஒதுக்குவது என்பது மிக மிகக்குறைவு. காசி இந்தியாவில் தான் உள்ளது. எனவே ஒவ்வொரு மாதமும் அழைத்து செல்லலாம். மூத்த குடிமக்களை அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கான செலவுகள் மிக மிக குறைவு. அதனால் குறைந்தபட்சம் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 பேரையாவது அழைத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வரவேற்கத்தக்கது

டாக்டர் லீலா சுப்பிரமணியம்:- தமிழக அரசு காசிக்கு 200 பேரை அழைத்துச் செல்வதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகம் முழுவதிலும் உள்ள 8 கோடி பேரில் பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்களில் 200 பேரை மட்டும் காசிக்கு அழைத்துச் செல்வது ஏற்கத்தக்கது அல்ல. 20 மண்டலங்களில் இருந்து 200 பேர் என்பது மிக மிக குறைவான நபர்களாகும். 38 மாவட்டங்களில் குறைந்தபட்சம் 100 பேர் என்றாலும் 3800 பேர் முதல் 5000 பேரை அழைத்துச் செல்லலாம். இதேபோன்று கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் மற்றும் முஸ்லிம்களுக்கு மெக்கா என்பது போல இந்துக்களுக்கு காசியாகும். ஆகையால் ஒரு முறையாவது காசிக்கு சென்று வர அனைவருக்கும் விருப்பமாக இருக்கும். ஆகையால் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி காசிக்கு அழைத்துச் செல்லலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story