தமிழக அரசு ஏற்பாடு காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம் பக்தர்கள் கருத்து


தமிழக அரசு ஏற்பாடு  காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்  பக்தர்கள் கருத்து
x

தமிழக அரசு ஏற்பாடு காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம் பக்தர்கள் கருத்து

சேலம்

சேலம்,

ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு புனித தலம் இருக்கிறது. வாழ்க்கையில் ஒருமுறையாவது அங்கு சென்றுவர வேண்டும் என்பது அவரவர் நம்பிக்கையாகவும் இருக்கிறது. இந்துக்கள் காசிக்கு செல்வதை புண்ணியமாக கருதுகிறார்கள். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதை பெருமையாக சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் 'ஹஜ்' பயணத்தை கடமையாக கொள்கிறார்கள். வசதி படைத்தவர்கள் நினைத்த மாத்திரத்தில் மேற்சொன்ன புனித தலங்களுக்கு சென்று வந்துவிடுகிறார்கள். வசதி குறைந்தவர்களால் அவ்வாறு செல்லமுடிவது இல்லை.

அரசு ஏற்பாடு

அவ்வாறு வசதி இல்லாதவர்கள் புனித தலங்களுக்கு சென்றுவர அரசாங்கம் உதவி வருகிறது. ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 550 பேர் அரசு நிதி உதவியுடன் ஜெருசலேம் சென்று வருகிறார்கள். தமிழக அரசின் மானிய உதவியுடன் இஸ்லாமியர்கள் 'ஹஜ்' பயணம் செல்கிறார்கள். அதுபோல் இந்துக்கள் 500 பேர் ஆண்டுதோறும் மானசரோவர், முக்திநாத் ஆகிய தலங்களுக்கு சென்றுவர உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2012-ம் ஆண்டு அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

காசி ஆன்மிக பயணம்

இந்தநிலையில் கடந்த மே மாதம் சட்டசபையில் நடந்த இந்துசமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை அறிவிப்பில், "காசிக்கு ஆன்மிக பயணமாக 200 பேர் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்ற தகவல் வெளியானது. அதற்கான செலவு ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதை நடைமுறைப்படுத்தும் விதமாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், 'ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு, தமிழ்நாட்டில் உள்ள 20 மண்டலங்களில் 200 பேர் ஆன்மிக பயணத்துக்கு ராமேசுவரம் கோவில் நிர்வாகத்தின் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். தகுதிவாய்ந்தவர்கள் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அந்தந்த மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உள்ளவராகவும், 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இந்த ஆண்டு காசி புனித பயணத்துக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 200 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்பட இருக்கிறது' என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

'வரவேற்கத்தக்கது'

தமிழக அரசின் இந்த ஆன்மிக பயண திட்டத்தை சேலம் மாவட்ட மக்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

சேலத்தை சேர்ந்த ஆர்.பி.கோபிநாத்:-

ராமேஸ்வரம் முதல் காசி வரை அழைத்து செல்ல ஆன்மிக பயண திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அங்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற தமிழக மக்களை வாரணாசியில் பொதுமக்களும், வியாபாரிகளும் சிறப்பான முறையில் வரவேற்றது பெருமைக்குரிய விஷயமாக உள்ளது. குறிப்பாக அரசு சார்பில் காசியை பார்க்க அழைத்து செல்வது என்பது இதுவரை காசிக்கு செல்லாதவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியும், சந்தோஷத்தையும் அளிப்பதாக அமைந்துள்ளது. அதேநேரத்தில் ஆண்டுக்கு 200 பேர் என்ற எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். மேலும், காசி மட்டுமல்ல கேதார்நாத், பூரி போன்ற ஆன்மிக தலங்களையும் இணைக்கும் வகையில் யாத்திரை பயணங்களை அரசு நடத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.

மாவட்டத்திற்கு 200 பேர் வீதம்

அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த சித்துராஜ்:-

காசி பயண திட்டத்தை முன்னெடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுகள். அதுவும் குறிப்பாக ராமேசுவரத்தில் இருந்து இந்த திட்டத்தை தொடங்குவது இன்னும் சிறப்பு. தமிழ்நாட்டில் மொத்தம் 200 பேர் அழைத்து செல்லப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகரித்து மாவட்டத்திற்கு 200 பேர் வீதம் காசிக்கு ஆன்மிக பயணம் அழைத்து சென்றால் நன்றாக இருக்கும். மேலும், இத்திட்டத்தில் 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டோர் மட்டும் அழைத்து செல்லப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மாற்றி 50 வயதுக்கு மேற்பட்டோரையும் அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் வசதி படைத்தவர்கள் தங்களுடைய சொந்த செலவிலேயே காசிக்கு செல்ல முடியும். ஆனால் இத்திட்டத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெருமளவில் பயன்பெறும் வகையில் விதிகளை உருவாக்கி அவர்களை அழைத்து செல்ல ஆவன செய்ய வேண்டும். குறிப்பாக இத்திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்யும்போது அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் வசதி இல்லாத பக்தர்களையும், ஏழைமக்களையும் தேர்வு செய்ய வேண்டும்.

குலுக்கல் முறையில் தேர்வு

தேவூரை சேர்ந்த கவிதா:-

கடவுள் நம்பிக்கை உள்ள தமிழக ஏழை மக்கள் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் இருந்து காசிக்கு செல்வது என்பது பெரிய கனவாக இருந்தது. ஆனால் தற்போது தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காசிக்கு ஆன்மிக பயண திட்டத்தில் இலவசமாக அழைத்து செல்வது வரவேற்கத்தக்கது. அனைத்து இந்து மக்களையும் வயது வித்தியாசம் இன்றி அழைத்து செல்ல வழிவகை செய்ய வேண்டும். இந்த யாத்திரை திட்டத்தை அதிகாரிகள் வெளிப்படை தன்மையுடன், புகார்கள் இன்றி, திறம்பட நடத்தி ஆன்மிகவாதிகள் மத்தியில் அரசுக்கு நல்ல பெயரை வாங்கி தரவேண்டும். குறிப்பாக பயனாளிகள் தேர்வை அந்தந்த மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 பேரை கோவிலில் பக்தர்கள் முன்னிலையில் சுவாமி சன்னதி எதிரில் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும்.

மிகவும் நல்ல முயற்சி

சேலம் மகேந்திரபுரியை சேர்ந்த ரமணி:-

வாழ்க்கையில் கடமைகளை முடித்த பின்னர் முன்னோர்கள் ஆசி கிடைப்பதற்காக ஒரு முறையாவது வடநாட்டில் உள்ள காசிக்கு செல்ல வேண்டும். ஆனால் 71 வயதான எனக்கு கடமையை முடித்த பின்னர், பொருளாதார பிரச்சினை, மொழிப்பிரச்சினையால் வயதான காலத்தில் காசிக்கு தனியாக செல்ல முடியாது. இந்தநிலையில் தமிழக அரசு காசிக்கு புனித பயனத்தை ஏற்படுத்தி தந்திருப்பது அனைவருக்கும் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். அதேநேரத்தில் வயது வரம்பை தளர்த்த வேண்டும். 60 முதல் 70 வயதுக்குள் என்று இருப்பதை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும். இந்த திட்டத்தில் எப்படி இணைவது? என்பது குறித்த விளக்கங்களை பெற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டால் இன்னும் நன்றாக இருக்கும். இறைவன் அருளை பெற அரசு எடுத்திருக்கும் இந்த முயற்சி மிகவும் நல்ல முயற்சி. ஒவ்வொரு ஆண்டும் இது தொடர வேண்டும்.

வயது வரம்பை தளர்த்தி...

சேலம் மேயர் நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன்:-

நான் பழனி, திருச்செந்தூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வருகிறேன். வாழ்க்கையில் ஒருமுறையாவது காசிக்கு செல்ல வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் தற்போது ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக பயணமாக அரசு சார்பில் அழைத்து செல்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் 200 பேர் மட்டுமே அழைத்து செல்வது என்பது மிகவும் குறைவு. குறைந்தது 1,000 பேரை தேர்வு செய்து அழைத்து செல்லலாம். மேலும் வயது வரம்பை தளர்த்தி இறை பக்தி உள்ள அனைவரையும் காசிக்கு அழைத்து செல்ல வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு மட்டும் புனித பயணத்துக்காக நிதியை அரசு வழங்கி வந்த நிலையில், இப்போது இந்துக்களுக்கான ஆன்மிக யாத்திரையை முன்னெடுத்திருக்கிறது. இது நிச்சயம் வரவேற்கத்தக்கது.

புத்தாண்டு பரிசாக பார்க்கிறோம்

சேலம் அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த அனுசுயா:-

காசிக்கும், தமிழகத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக கருதுகிறேன். ஏனென்றால் நமது முன்னோர்கள் ஆசி கிடைப்பதற்காக ஒரு முறையாவது வடநாட்டில் உள்ள காசிக்கு செல்ல வேண்டும். ஆனால் பொருளாதார பிரச்சினை, மொழிப்பிரச்சினையால் காசிக்கு தனியாக செல்ல முடியாது. ஆனால் ராமேசுவரத்தில் இருந்து காசி கோவிலுக்கு ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லும் பயண திட்டத்தை தமிழக அரசு அறிவித்ததை, 2023-ம் ஆண்டுக்கான புத்தாண்டு பரிசாகத்தான் பார்க்கிறோம். காசிக்கான புனித பயணத்தில் ஆண்டுக்கு 200 பேர் மட்டும் அழைத்து செல்லப்படுவார்கள் என்பது 'கடலில் காயத்தை கரைப்பதற்கு சமம்'. எனவே மாவட்டந்தோறும் 200 பேரை அழைத்துச் செல்லும் வகையில் இத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மொத்தத்தில் இந்த திட்டம் இந்துக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story