உடன்குடி வாரச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200
உடன்குடி வாரச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200-க்கு விற்கப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி வாரச்சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.200-க்கு விற்கப்பட்டது. மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்து விற்கப்பட்டதால், பொதுமக்கள் வேதனையுடன் குறைந்த அளவிலேயே வாங்கி சென்றனர்.
வாரச்சந்தை
உடன்குடியில் நேற்று வாரச்சந்தை நடந்தது. வழக்கம் போல் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு இருந்த போதிலும், காய்கறிகளின் வரத்து குறைவாக காணப்பட்டது.
கடந்த வாரத்தை விட இங்கு காய்கறி விலைகள் அதிகரித்து விற்கப்பட்டன. குறிப்பாக கிலோ தக்காளி ரூ.200-க்கு விற்கப்பட்டது. முன்பெல்லாம் கடைகளில் முன்பகுதியில் குவியல் குவியலாக கூடைகளில் குவித்து வைத்து விற்கப்படும் தக்காளி, நேற்று குறைந்த அளவிலேயே வைக்கப்பட்டு இருந்தன. அதிலும் தக்காளி கூடைகள் கடைகளின் பின்புறத்தில் வைத்து விற்கப்பட்டன.
வியாபாரிகள் கண்டிப்பு
கூடைகளில் இருந்த தக்காளிகளை பதம் பார்த்து வாங்க பொதுமக்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கடைவியாபாரி மற்ற காய்கறிகளை போல தராசில் அள்ளிப்போட்டு கொடுத்ததை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அந்த அளவுக்கு தக்காளி விற்பனையில் கடை வியாபாரிகள் கண்டிப்புடன் நடந்து கொண்டனர்.
அதேபோன்று ஒரு கிலோ இஞ்சி ரூ.280-க்கும், வெள்ளை பூண்டு ரூ.200-க்கும், பீன்ஸ் ரூ.140-க்கும் உச்சபட்ச விலையில் விற்கப்பட்டன. மேலும், கிலோவுக்கு சின்ன வெங்காயம், மிளகாய், கேரட் ஆகியவை தலா ரூ.80-க்கும், பாகற்காய், கத்தரிக்காய், முட்டைகோஸ் தலா ரூ. 60-க்கும். வெண்டைக்காய், பீட்ரூட், சவ்சவ், உருளைக்கிழங்கு ஆகியவை தலா ரூ.40-க்கும் விற்கப்பட்டன.
மக்கள் வேதனை
காய்கறிகள் உச்ச விலையில் விற்கப்பட்ட நிலையில் சுற்றுவட்டாரத்தில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வேதனையுடன் குறைந்த அளவிலேயே வாங்கி சென்றனர்.