கடைகளில் குப்பைகள் சேகரிக்க 200 தூய்மை பணியாளர்கள்
நெல்லை மாநகரில் கடைகளில் குப்பைகள் சேகரிக்க 200 தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் மாநகராட்சி பகுதிகளில் வார்டுகளில் வீடு, வீடாக குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் வீடுகள் மற்றும் கடைகள், வணிக நிறுவனங்களில் இருந்து ஒரே பணியாளர் குப்பைகளை சேகரிக்கும் போது தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டு வந்ததாக ஆணையாளருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வீடுகளில் குப்பைகளை சேகரிக்கும் பணி பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி கடைகளில் மட்டும் குப்பைகளை சேகரிக்க ஒரு மண்டலத்துக்கு 50 பேர் வீதம், 4 மண்டலங்களுக்கும் மொத்தம் 200 தூய்மை பணியாளர்கள் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் காலையில் 4 மணி நேரம் மற்றும் இரவில் 4 மணி நேரம் கடை வீதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியை தொடங்கினார்கள். இதுதவிர சாலைகளில் குப்பைகள், புழுதிகள் பறப்பதை கட்டுப்படுத்தி தூய்மை பணியில் ஈடுபடுவதற்காக தனியாக 100 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். வண்ணார்பேட்டை பகுதியில் உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் மேற்பார்வையில், சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் இப்பணிகள் தொடங்கப்பட்டது.