200 அரங்குகளுடன் கட்டுமான பொருட்கள் கண்காட்சி


200 அரங்குகளுடன் கட்டுமான பொருட்கள் கண்காட்சி
x
திருப்பூர்


திருப்பூர் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன் சார்பில் 200 அரங்குகளுடன் கட்டுமான பொருட்கள் கண்காட்சி வரும் 30-ந்தேதி தொடங்குகிறது.

கட்டுமான பொருட்கள் கண்காட்சி

திருப்பூர் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன் சார்பில் 200 அரங்குகளுடன் கட்டுமான பொருட்கள் கண்காட்சி வரும் 30-ந்தேதி தொடங்குகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முடிவில் அசோசியேசன் தலைவர் ஸ்டாலின் பாரதி, கண்காட்சித் தலைவர் துரைசாமி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன் சார்பில் 17-வது கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி திருப்பூர்-தாராபுரம் ரோடு, வித்யாகார்த்தி திருமண மண்டபத்தில் வரும் 30-ந்தேதி தொடங்குகிறது. கண்காட்சியின் தொடக்க விழா அன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு சங்கத் தலைவர் ஸ்டாலின் பாரதி தலைமை வகிக்கிறார். செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசுகிறார். கண்காட்சித் தலைவர் துரைசாமி விழா அறிக்கை வாசிக்கிறார். சிறப்பு விருந்தினர்களாக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கண்காட்சி அரங்கை திறந்து வைக்கிறார். பொறியியல் பொக்கிஷம் 2022-23 கண்காட்சி மலரை திருப்பூர் எம்.பி.சுப்பராயன் வெளியிட, சங்கத்தின் பட்டயத் தலைவர் சிதம்பரம் பெற்றுக்கொள்கிறார். சங்கத்தின் 2023-ம் ஆண்டு நாள்காட்டியை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.செல்வராஜ் வெளியிட, உடனடி முன்னாள் தலைவர் முரளி பெற்றுக்கொள்கிறார். குறிப்பேட்டை மேயர் தினேஷ்குமார் வெளியிட, சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் தில்லைராஜன் பெற்றுக்கொள்கிறார். சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் சான்றிதழை துணை மேயர் பாலசுப்பிரமணியம் வழங்குகிறார். இதை சங்க முன்னாள் மாநில பொருளாளர் ரமேஷ்குமார் பெற்றுக் கொள்கிறார்.

200 அரங்குகள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிடப் பொறியாளர்கள் சங்க மாநில தலைவர் ரவி சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குகிறார். இதை முன்னாள் மாநில பொருளாளர் பொன்னுசாமி பெற்றுக்கொள்கிறார். கண்காட்சியில் தமிழகம் மற்றும் இ்ந்தியாவில் உள்ள கட்டிட கட்டுமான பொருட்கள் தயாரிப்பிலும், விற்பனையிலும் சிறந்து விளங்கும் 200 நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டிடத்திற்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் பொதுமக்களுக்கு நேரமும், அதிக செலவும் குறையும். கட்டிடம் கட்டி கொண்டிருப்பவர்களுக்கும், இனி கட்டிடம் கட்ட உள்ளவர்களுக்கும் இந்த கண்காட்சி மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்த கண்காட்சி ஜனவரி 2-ந் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 4 நாட்கள் நடைபெறும். கண்காட்சியில் தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கண்காட்சிக்கான அனுமதி இலவசம். மேலும் 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்கள் யுனானி மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை முகாம், ஜனவரி 1-ந் தேதி இலவச கண் சிகிச்சை முகாம், 1, 2 ஆகிய தேதிகளில் இலவச ரத்த அழுத்தம், இசிஜி பரிசோதனை முகாம் நடைபெறும். செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் பழனிச்சாமி, கண்காட்சி செயலாளர் பிரகாஷ், பொருளாளர் பாரதிராஜா, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், துணைச் செயலாளர் ராஜசேகரன், துணை பொருளாளர் மகேஷ்குமார், தகவல் தொடர்பாளர் நாகராஜ், கண்காட்சி மலர்குழு தலைவர் சம்பத்குமார் மற்றும் கண்காட்சி குழுவினர் கண்காட்சிக்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story