வடலூர் ஞானசபையில் வள்ளலாரின் 200-வது அவதார தினவிழா
வடலூர் ஞானசபையில் வள்ளலாரின்200-வது அவதார தினவிழா கொண்டாடப்பட்டது.
வடலூர்,
அவதார தினவிழா
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் கடந்த 1,823-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்தார். இவர் சென்னை, வடலூர் பார்வதிபுரம், கருங்குழி ஆகிய இடங்களில் வாழ்ந்து மேட்டுக்குப்பத்தில் கடந்த 1874-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி சித்தி பெற்றார். இறைவன் ஒளி (ஜோதி) வடிவானவர் என உலகிற்கு உணர்த்த வடலூர் பார்வதிபுரத்தில் ஞானசபையை நிறுவி, மாதம்தோறும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகள் நீக்கிய ஜோதி தரிசனமும், ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்தன்றும் ஏழு திரைகள் நீக்கிய ஜோதி தரிசனம் காண்பித்தார். அன்று முதல் மேற்கண்ட நிகழ்ச்சி நடைபெற்று வருவதோடு, மக்கள் பசி பிணி இல்லாமல் இருக்க ஏதுவாக வடலூரில் சத்திய தரும சாலையை உருவாக்கி அதன்மூலம் தினமும் 3 வேளையும்அன்னதானம் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
சன்மார்க்க கொடியேற்றம்
இத்தகைய சிறப்புக்குரிய அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது பிறந்த தினம் வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லம், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லம், வள்ளலார் சித்திப் பெற்ற மேட்டுக்குப்பம் மற்றும் வடலூர் ஞானசபை, தருமச்சாலை ஆகிய இடங்களில் நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் வடலூர் தரும சாலையில் காலை 7 மணிக்கும், மருதூரில் 8 மணிக்கும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தரும சாலை மேடையில் நடுபட்டு புருஷோத்தமன், கனகசபை குழுவினரின் வில்லுப்பாட்டு கலைநிகழ்ச்சியும், சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது.
அவதார தினவிழாவை முன்னிட்டு மேற்கண்ட இடங்களில் கடந்த ஒருவார காலம் அருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தினர் செய்திருந்தனர்.