கொள்முதல் நிலையங்களில் தினமும் 2 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் -அன்புமணி ராமதாஸ்


கொள்முதல் நிலையங்களில் தினமும் 2 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் -அன்புமணி ராமதாஸ்
x

லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம்: கொள்முதல் நிலையங்களில் தினமும் 2 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 10.50 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்தன. அவற்றில் இதுவரை 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுவிட்டன. மீதமுள்ள 7 லட்சம் ஏக்கரில், அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் அடுத்த சில நாட்களில் அறுவடை செய்யப்பட உள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 456, திருவாரூர் மாவட்டத்தில் 519, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 159, மயிலாடுதுறை மாவட்டத்தில் 150 என மொத்தம் ஆயிரத்து 284 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திற்கும் தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையில் நெல் மூட்டைகள் வருகின்றன. ஆனால், மழையால் ஏற்பட்ட பாதிப்பு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பல கொள்முதல் நிலையங்களில் தினமும் 500 முதல் 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. அதனால், கொள்முதல் நிலையங்களுக்கு நெல் கொண்டு வரும் விவசாயிகள் ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

காவிரி பாசன மாவட்டங்களில் இப்போதுதான் சம்பா அறுவடை தொடங்கி உள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குள் சம்பா அறுவடை உச்சத்தை அடைந்து தாளடி அறுவடையும் தொடங்கிவிடும். அந்த நேரத்தில் ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் நிலையங்களுக்கு வரக்கூடும். அப்போது நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளின் எண்ணிக்கை பல லட்சமாக உயரக்கூடும்.

எனவே, ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் தினமும் குறைந்தபட்சம் 2 ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் மூட்டைகளை இருப்பு வைக்கும் அளவுக்கு கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story