பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

கடலூர்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 16-ந்தேதி(திங்கட் கிழமை) மாட்டு பொங்கல், 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காணும் பொங்கல், 19-ந்தேதி ஆற்றுத்திருவிழா நடக்க இருக்கிறது. இதையொட்டி கடைவீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிய தொடங்கி உள்ளனர். இதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில், 2 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 33 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 231 சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

84 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடி

பொங்கல் திருவிழாவின் போது மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள், பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெரும் கிராமங்களில் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டும், பொங்கல் திருவிழாவின்போது பிரச்சினைக்குரிய கிராமங்களில் இரு சக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபடுவார்கள். பொங்கல் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் போக்குவரத்து பாதிக்காத வண்ணம் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். போலீஸ் அதிகாரிகள் காவல்துறை வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது கடத்தலை தடுக்கும் வகையில், மாவட்ட எல்லையில் 8 மதுவிலக்கு சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். மேலும் கூடுதலாக கடலூர் மாவட்டத்தில் 84 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து வாகன தணிக்கை மேற்கொள்வார்கள்.

வழக்குப்பதிவு

ஆற்றுத்திருவிழா நாளில் பொதுமக்கள் அதிகம் கூடும் பெண்ணையாறு, தேவனாம்பட்டினம் சில்வர் பீச், சாமியார்பேட்டை கடற்கரை ஆகிய இடங்களில் அசம்பாவித சம்பங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பொங்கல் திருவிழாவின்போது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோர். சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story