சதுரகிரி கோவிலில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


சதுரகிரி கோவிலில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
x

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வருகிற 28-ந் தேதி ஆடி அமாவசை விழா நடக்கிறது. அங்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மதுரை

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வருகிற 28-ந் தேதி ஆடி அமாவசை விழா நடக்கிறது. அங்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

ஆலோசனை கூட்டம்

சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந் தேதி நடக்கிறது. அதற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பணி குறித்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சாப்டூர் கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டு வருகின்ற 28-ந் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது.

இந்த திருவிழாவிற்காக 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வரை சுவாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். பக்தர்கள் தினமும் காலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மலை மீது ஏறி இறங்க அனுமதிக்கப்படுவார்கள்.

கண்காணிப்பு கேமரா

மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மலை அடிவாரத்தில் இருந்து கோவில் வரை பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் இருப்பார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. தாணிப்பாறையில் இருந்து கோவில் வரையுள்ள மலைப்பாதைகளில் போதுமான மின்விளக்குகள் மற்றும் சூரியசக்தி விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. கழிப்பறை வசதி உள்ளிட்ட இதர அடிப்படை வசதிகளை சிறந்த முறையில் செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக அபாய ஒலிக்கருவி, வாக்கி டாக்கிகள், வில் போன்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனுக்குடன் குப்பைகளை சேகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை சார்பில் 30 மருத்துவ குழுக்களும், 108 ஆம்புலன்ஸ் வசதியும், 2 நகரும் மருத்துவமனையும், 2 இருசக்கர ஆம்புலன்சும் நிறுவப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில் மொத்தம் 7 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.கோவிலை தூய்மை காத்திடும் பொருட்டு தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணிகள் திட்டத்தை சேர்ந்த 100 மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், உசிலம்பட்டி கோட்டாட்சியர் நடராஜன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story