பி.எஸ்.என்.எல். 4ஜி அறிமுகம் செய்வதில் காலதாமதம் ஏன்? நிர்வாக இயக்குனர் பேட்டி


பி.எஸ்.என்.எல். 4ஜி அறிமுகம் செய்வதில் காலதாமதம் ஏன்? நிர்வாக இயக்குனர் பேட்டி
x
தினத்தந்தி 1 Jan 2017 4:15 AM IST (Updated: 1 Jan 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.என்.எல். 4ஜி அறிமுகம் செய்வதில் காலதாமதம் ஏன்? என்று பி.எஸ்.என்.எல். தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா விளக்கம் அளித்தார்.

சென்னை, 

பி.எஸ்.என்.எல். 4ஜி அறிமுகம் செய்வதில் காலதாமதம் ஏன்? என்று பி.எஸ்.என்.எல். தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா விளக்கம் அளித்தார்.

புதிய சிம் கார்டு அறிமுகம் 

பி.எஸ்.என்.எல்.லில் 144 ரூபாய் புதிய சிம் கார்டு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி அண்ணாசாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.என்.எல். தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா தலைமை தாங்கி புதிய சிம் கார்டை அறிமுகம் செய்துவைத்தார்.

இதில், தமிழக தொலைபேசி வட்ட தலைமை பொது மேலாளர் பூங்குழலி, சென்னை தொலைபேசி வட்ட தலைமை பொது மேலாளர் கலாவதி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பி.எஸ்.என்.எல். தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

2006–ம் ஆண்டில்... 

இயற்கை சீற்றம் போன்ற பேரிடர் காலங்களில் தொலை தொடர்பு நிறுவனங்களில் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது பி.எஸ்.என்.எல். தான். சமீபத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ‘வார்தா’ புயல் சூறையாடியது. அந்த சமயத்தில் பிற தொலை தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் பி.எஸ்.என்.எல். ஒருவரையொருவர் தொடர்புகொள்வதற்கு பெரிதும் உதவியாக இருந்ததை பார்க்க முடிந்தது.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2002–2006–ம் ஆண்டுகளில் அதிநவீன வளர்ச்சி காரணமாக 2006–ம் ஆண்டில் முதல் இடத்தை பிடித்தது. அதன்பின்னர், 2006–2012 வரை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டது. இதனால் வருவாய் ரீதியாக பெரும் பின்னடவை சந்திக்க நேர்ந்தது.

2012–ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு புதிய சேவைகளை கொண்டுவந்து முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம். தற்போது 30 ஆயிரம் தொலை தொடர்பு கோபுரங்களை வைத்து இருக்கும் ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல். தான். மேலும் 15 ஆயிரம் தொலை தொடர்பு கோபுரங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் விதமாக... 

சில ஆண்டுகளாக சிறப்பான சேவைகள் மூலம் கொஞ்சம் லாபம் கிடைத்து இருக்கிறது. பல்வேறு விரிவாக்க பணிகள், புது சேவைகள், இழப்புகளை தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் 2018–2019–ம் ஆண்டில் எங்களுடைய நிகர லாபத்தை அதிகரிக்க திட்டம் தீட்டி இருக்கிறோம்.

தற்போதுள்ள சூழ்நிலையில் தொலை தொடர்பு துறையில் பல்வேறு விதமான போட்டிகள் நிறைந்துள்ளன. பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்கள் இருந்தாலும், பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் விதமாக 270 டெரா பைட்சில் இருந்து 340 டெரா பைட்ஸ் அளவுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்யும் வகையில் சேவைகளை விரிவாக்கம் செய்து இருக்கிறோம்.

தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் விதமாக பல்வேறு சிறப்பு சலுகைகளை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினோம். இந்த சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு நாடு முழுவதும் புதிதாக 1.5 லட்சம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களையும், 22 லட்சம் செல்போன் வாடிக்கையாளர்களையும் பெற்று இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் 56 ஆயிரம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளோம். நவம்பர் 8–ந் தேதிக்கு பிறகு பிரதமர் நரேந்திரமோடி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கொண்டுவர முயற்சி செய்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக நாங்களும் பி.எஸ்.என்.எல். ‘பில்’ தொகையை செலுத்த ‘சுவைப் மெஷினை’ வினியோகித்து வருகிறோம்.

தொலை தொடர்பு கோபுரங்கள் 

‘மோடி கேஷ்’ என்ற ‘மொபைல் வாலட்’ ஸ்மார்ட் போன்களில் மட்டுமல்லாது, சாதாரண மொபைல் போன்களிலும் உபயோகப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது. தொலை தொடர்பு கோபுரங்கள் பகிர்ந்தளித்தல் மூலம் ரூ.222 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது. இதில் 8 சதவீதம் தொலை தொடர்பு உரிமத்துக்கு வரி கட்ட வேண்டி இருப்பதால் சில நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது.

அதுவே தொலை தொடர்பு கோபுரங்களை பி.எஸ்.என்.எல். நிர்வாகம் மூலம் தனியாக தொழிற்சாலை அமைத்து தயாரிக்கும் திட்டம் குறித்து மத்திய அமைச்சகத்திடம் பேசினோம். இந்த பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்கள் இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதை காரணமாக வைத்து தனியார் நிறுவனமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மாற்றிவிடுவார்கள் என்று அவர்கள் அச்சம் காட்டுகின்றனர். ஊழியர்களிடம் கலந்தாலோசித்து பேசி இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பி.எஸ்.என்.எல். 4ஜி 

‘பி.எஸ்.என்.எல். 4ஜி’ அறிமுகம் செய்வதில் காலதாமதம் ஏன்? என்று அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அனுபம் ஸ்ரீவஸ்தவா, ‘அடிப்படை கட்டமைப்பு வசதி, பொருளாதார பிரச்சினை காரணமாக தான் காலதாமதம் ஏற்படுகிறது. வை–பை, ‘ஹாட் ஸ்பாட்’ மூலம் ‘4ஜி’ சேவையை வழங்குவதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகிறோம். 2018–ம் ஆண்டுக்குள் ‘4ஜி’ சேவையை முழுவதுமாக வழங்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது’ என்றார்.



Next Story