ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூரில் 7–ந் தேதி த.மா.கா. ஆர்ப்பாட்டம் ஜி.கே.வாசன் பேட்டி
ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூரில் வருகிற 7–ந் தேதி த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
சென்னை
ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூரில் வருகிற 7–ந் தேதி த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், கொச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழக அரசு விளக்கம்
தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து உள்ளன. இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் விளக்கம் கோரியது மட்டுமின்றி சென்னை ஐகோர்ட்டு நீதிபதியின் கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் ஜெயலலிதாவின் மறைவு குறித்த உண்மை நிலைமையை தமிழக அரசு விளக்க வேண்டும்.
அரசியல் கண்ணோட்டத்தை பார்க்காமலும், காலம் தாழ்த்தாமலும் வெளியிட வேண்டும். காலம் தாழ்த்தினால் சந்தேகம் வலுப்பெறும். ஜெயலலிதா மறைவு பற்றிய விளக்கத்தை தமிழக அரசிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த கருத்தை த.மா.கா.வும் வலியுறுத்துகிறது.
7–ந் தேதி ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டு நடைபெறுமா?, நடைபெறாதா? என்றால் நடைபெறாது என்ற ரீதியிலேயே உள்ளது. இதற்கான எந்த விதமான ஆயத்த பணிகளிலும் மத்திய அரசு ஈடுபடவில்லை. உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி ஜல்லிக்கட்டு நிலுவையில் உள்ளது.
ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி த.மா.கா. சார்பில் அலங்காநல்லூரில் வருகிற 7–ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு பாதுகாப்பான முறையில் நடக்க வேண்டும். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படகுகளை விடுவிக்க வேண்டும்
கருப்பு பண ஒழிப்பு குறித்து மத்திய அரசு அறிவித்து 50 நாட்கள் ஆகியும் பணத்தட்டுப்பாடு தீரவில்லை. வங்கிகளுக்கு மத்திய அரசு தந்த கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் தளர்த்திக்கொள்ள வேண்டும். மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். இந்த அறிவிப்பு உடனடியாக இருக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இலங்கை அரசின் அராஜக போக்கால் 124 படகுகள் பிடித்து வைத்து உள்ளனர். உடனடியாக தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம்பிக்கையை இழந்த அரசு
வார்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உரிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். இந்த வருடம் விவசாயிகளுக்கு கருப்பு வருடமாக அமைந்து உள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. பயிர்கள் கருகி உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான நஷ்டஈட்டை வழங்க மத்திய–மாநில அரசுகள் தவறிவிட்டது.
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என த.மா.கா. உள்பட அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய–மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை. விவசாயிகளின் நம்பிக்கையை இழந்த அரசாக மத்திய–மாநில அரசுகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story