தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை, அரசு உடைமையாக்கியது இந்திய அரசுக்கு விடப்பட்ட சவால் வைகோ கண்டனம்


தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை, அரசு உடைமையாக்கியது இந்திய அரசுக்கு விடப்பட்ட சவால் வைகோ கண்டனம்
x
தினத்தந்தி 1 Jan 2017 2:00 AM IST (Updated: 1 Jan 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு உடைமையாக்கியது இந்திய அரசுக்கு விடப்பட்ட சவால் என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு உடைமையாக்கியது இந்திய அரசுக்கு விடப்பட்ட சவால் என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெட்ககேடானது 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக மீனவர்களின் 120 படகுகள் அரசுடமை ஆக்கப்படும் என்று இலங்கை அரசின் அமைச்சரான மகிந்த சமரவீரா அறிவித்துள்ள செயல் இந்திய அரசுக்கே விடப்பட்ட சவாலாகும். கடந்த 40 ஆண்டுகளாக, குறிப்பாக கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை தமிழக மீனவர்கள் 700–க்கும் மேற்பட்டோரை இலங்கைக் கடற்படை நமது கடல் எல்லையிலும், சர்வதேச கடல் எல்லையிலும் சுட்டு படுகொலை செய்தது.

தமிழக மீனவர்களின் படகுகளை மீனவர்களோடு சேர்த்து சிறை பிடித்து, மீனவர்களை இலங்கைச் சிறைகளில் அடைப்பதும், படகுகள் பாழாகும் நிலை ஏற்படுத்துவதும், ஒவ்வொரு முறையும் இந்திய அரசு இலங்கை அரசிடம் தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு மன்றாடுவதும் வெட்ககேடானது. இலங்கை நாட்டின் நட்புறவு வேண்டும் என்பதற்காக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஈழத்தமிழ் இனப்படுகொலையின் கூட்டு குற்றவாளியாக உதவியது.

சவால் 

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் நாசகார இலங்கை அரசின் நட்புக்காக ஈழத் தமிழர் நலன்களை பலியிட்டு வருகிறது. தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசுடமை ஆக்கப்போகிறோம் என்று அகம்பாவத்தோடும், திமிரோடும் அறிவிக்கிற துணிச்சலுக்கு இந்திய அரசின் அணுகுமுறைதான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறேன். இது இந்திய அரசுக்கு இலங்கை அரசு விடுத்துள்ள சவாலாகும் என்பதை பிரதமர் உணர வேண்டும்.

இலங்கையின் இந்த விபரீத போக்கை மத்திய அரசு தடுத்து நிறுத்தாவிட்டால், தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களாகவே மத்திய அரசு கருதவில்லையோ என்ற கேள்வி தமிழக மீனவர்கள் மனதில் மட்டுமல்ல, தமிழக மக்களின் மனதிலும் ஏற்படும் என்பதை எண்ணிப் பார்த்து, இந்திய அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இல்லையேல் பின் விளைவுகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டையே கேள்விக்குறியாக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story