வறட்சி காரணமாக பயிர்கள் கருகியதால் அதிர்ச்சி: உயிர் இழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்


வறட்சி காரணமாக பயிர்கள் கருகியதால் அதிர்ச்சி: உயிர் இழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 Jan 2017 2:45 AM IST (Updated: 1 Jan 2017 1:51 AM IST)
t-max-icont-min-icon

‘‘வறட்சி காரணமாக பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்’’, என்று தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

‘‘வறட்சி காரணமாக பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்’’, என்று தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

விவசாயிகள் தற்கொலை 

வறட்சியின் கொடுமையால் பயிர்கள் கருகியதை தாங்கிக்கொள்ள முடியாமல் ஒரே நாளில் 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தும் உயிரிழந்து உள்ளனர். காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயிகளின் உயிரிழப்பு தொடர்வது அதிர்ச்சியும், சோகமும் அளிக்கிறது.

உழவர்களின் தற்கொலைக்கு மத்திய–மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடகத்திடம் இருந்து காவிரியில் தண்ணீர் பெற்று குறுவை மற்றும் சம்பா சாகுபடியை வெற்றிகரமாக செய்து முடிக்க மத்திய–மாநில அரசுகள் உதவி செய்திருந்தால், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள், மகிழ்ச்சியடைந்து இருப்பார்கள். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து விட்டது. மத்திய அரசு, கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்பட்டது. அரசியல் அழுத்தம் கொடுக்க தமிழகமும் தவறி விட்டது.

அரசின் கடமை 

விவசாயிகள் தங்கள் துயரத்தை வெளிப்படுத்த பல்வேறு வழிகளில் அறப்போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளின் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி பா.ம.க. வலியுறுத்தியபோதும், அதை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாததன் விளைவாகத் தான் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது. போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத்தினருடன் அரசு பேச்சு நடத்திய போதிலும், அதில் உழவர்களுக்கு சாதகமாக உடன்பாடு எட்டப்பட்டதாக தெரியவில்லை.

வறட்சியால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய அரசு உதவுவதன் மூலம் மட்டுமே தற்கொலைகளையும், அதிர்ச்சி சாவுகளையும் தடுக்க முடியும். உணவளித்து மக்களை வாழவைக்கும் விவசாயிகளுக்கு வாழ்வு அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

தலா ரூ.25 லட்சம் 

எனவே, காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட ஒட்டுமொத்த தமிழகத்தையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, உச்சவரம்பும், நிபந்தனையும் இல்லாமல் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதமும், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்.

அதிர்ச்சியிலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்த அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அவர்கள் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story