பயிர்கள் கருகியதால் பெண் உள்பட விவசாயிகள் 12 பேர் பலி
பயிர்கள் கருகியதால் பெண் உள்பட 12 விவசாயிகள் உயிர் இழந்தனர்.
தஞ்சை,
பயிர்கள் கருகியதால் பெண் உள்பட 12 விவசாயிகள் உயிர் இழந்தனர்.
பயிர்கள் கருகின
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் பயிர் செய்து இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றிவிட்டது. போதிய அளவு மழை பெய்யாததால் ஏரி, குளங்கள், அணைகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் தண்ணீர் இல்லாமல் பல இடங்களில் பயிர்கள் கருகிவிட்டன.
பயிர்கள் கருகியதால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். அதிர்ச்சியில் பலர் இறந்து இருக்கிறார்கள். ஒரே நாளில் 12 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
நாகை மாவட்டம்
நாகையை அடுத்த நாகூர் போலீஸ் சரகம் கடம்பங்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி வீரமணி (வயது 30), கொட்டாரக்குடியை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்பு பணியினை மேற்கொண்டிருந்தார். தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதை பார்த்து அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்த வீரமணியை சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்துள்ள கடம்பரவாழ்க்கை கிராமத்தை சேர்ந்த சரோஜா (60) 2 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்து இருந்தார் தண்ணீரின்றி பயிர்கள் கருகுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த சரோஜா நேற்று முன்தினம் மாலை வயலிலேயே மயங்கி விழுந்து உயிர் இழந்தார்.
மயங்கி விழுந்து சாவு
இதபோல் கீழ்வேளூர் அருகே உள்ள ஆனைமங்கலம் ஊராட்சி ஓர்குடி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள்(60) 2 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்திருந்தார். நேற்று மதியம் வயலுக்கு சென்ற கலியபெருமாள் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதை கண்டு அதிர்ச்சி அடைந்து வயலிலேயே மயங்கி விழுந்து இறந்தார்.
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியை சேர்ந்த கணபதி (74) தனது 6 ஏக்கர் நிலத்தில் சம்பாசாகுபடி செய்திருந்தார். போதிய தண்ணீர் இல்லாததால் சாகுபடி செய்திருந்த பயிர்கள் முழுவதும் கருகிவிட்டது. இந்நிலையில் நேற்று வயலுக்கு சென்று வீடு திரும்பிய அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
நேற்று வயலுக்கு சென்ற பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி பகுதியை சேர்ந்த கோகுலவாசன் (70) கருகிய பயிர்களை பார்த்து மனமுடைந்து அங்கேயே மயங்கி விழுந்து இறந்தார்.
இதேபோல் வயலுக்கு சென்ற திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி கூத்தப்பட்டார் தோப்பு பகுதியை சேர்ந்த திருமாவளவன் (40) பயிர்கள் கருகியதை பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு வயலிலேயே மயங்கி விழுந்து இறந்தார்.
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம் வடுகக்குடி மேலத்தெருவை சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் (வயது 62). வெங்கடாச்சலம் தனக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்து இருந்தார். வயலுக்கு சென்ற அவர் பயிர்கள் கருகி கிடப்பதை பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார்.
பயிர்கள் கருகியதால் இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 6 பேரும், நாகை மாவட்டத்தில் 23 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 14 பேரும் உயிர் இழந்து இருக்கிறார்கள்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஏகனிவயலை சேர்ந்த ஞானசுந்தரம் (64) 5 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து இருந்தார். நேற்று முன்தினம் வயலுக்கு சென்ற அவர் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் வாடிக்கிடப்பதையும், அதை கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் சுருண்டு விழுந்த ஞானசுந்தரத்தை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.
வடகாடு அருகே உள்ள மாங்காட்டை சேர்ந்த மாரிமுத்து (60). நேற்று காலை தனது தோட்டத்தில் பயிரிட்டு இருந்த கடலை பயிர் கருகி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் அங்கேயே மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கறம்பக்குடி அருகே உள்ள கடுக்காகாடு கிராமத்தை சேர்ந்த பிரேமானந்தம் (வயது 37). 2 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து உளுந்து பயிரிட்டு இருந்தார். தண்ணீரின்றி உளுந்து பயிர் கருகியதால் வேதனையில் இருந்த பிரேமானந்தத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் அவரை ஆலங்குடியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கணபதியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா 6 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்து இருந்தார். தண்ணீர் இல்லாமல் அந்த பயிர்கள் கருகியதால் வேதனை அடைந்தார். இந்த நிலையில் நேற்று வயலுக்கு சென்ற கருப்பையா திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார்.
மாரடைப்பால் மரணம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள படர்ந்தபுளியை சேர்ந்த விவசாயி சுப்பையா (44) தனது சகோதரர்கள் அயன்ராஜ், ரங்கசாமி ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். இவர்களுக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கர் மானாவாரி நிலத்தில் உளுந்து, பாசி பயறு பயிரிட்டு இருந்தனர். பயிர்களுக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து வாங்குவதற்காக சுப்பையா சிலரிடம் கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.
தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் அதிர்ச்சி அடைந்த சுப்பையா, வாங்கிய கடனை எப்படி திரும்ப செலுத்துவது? என்று கூறி புலம்பியவாறு இருந்தார். மிகுந்த மனவேதனையில் இருந்த அவர் வயலுக்கு சென்று விட்டு இரவில் வீட்டுக்கு வந்து தூங்கியபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார். நேற்று காலையில் அவர் படுக்கையில் பிணமாக கிடந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
Next Story