நாராயணசாமி புத்தாண்டு வாழ்த்து ‘புதுமையையும், புரட்சிகரமான மாறுதலையும் தரட்டும்’


நாராயணசாமி புத்தாண்டு வாழ்த்து ‘புதுமையையும், புரட்சிகரமான மாறுதலையும் தரட்டும்’
x
தினத்தந்தி 1 Jan 2017 5:00 AM IST (Updated: 1 Jan 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி, 2017-ம் ஆண்டு புதுமையையும், புரட்சிகரமான மாறுதலையும் தரட்டும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதல்-அமைச்சர் நா

புதுச்சேரி,

2017-ம் ஆண்டு புதுமையையும், புரட்சிகரமான மாறுதலையும் தரட்டும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

உறுதி ஏற்போம்

புதுச்சேரி மாநில மக்களின் ஆசியாலும், பல்லாயிரக்கணக்கான அன்புள்ளங்களின் உறுதுணையாலும் 2016-ம் ஆண்டை பல மக்கள் நல முடிவுகளை எடுத்து ஒரு வளர்ச்சி தரும் ஆண்டாக உருவாக்கி உள்ளேன். பாரம்பரிய பெருமைகளையும், பண்பாட்டு வேர்களையும் போற்றி பாதுகாத்து வரும் நமது மக்களுடைய விருப்பத்திற்கும், எண்ணத்திற்கும் ஏற்ற ஒரு நல்லாட்சி ஏற்படுத்தும் வாய்ப்பை வழங்கியது மட்டுமின்றி என்னையும் மக்கள் நல சேவகனாக வெற்றி பெறச் செய்த ஆண்டாக கடந்த 2016-ம் ஆண்டு விளங்கியது.

நாம் அடியெடுத்து வைக்க உள்ள 2017-ம் ஆண்டு சவால்கள் மிக்க வருடமாக இருந்தாலும் நிச்சயம் புதுவை மாநிலத்திற்கு வெற்றியும், புதுமையையும் தொழில் வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் தரும் வருடமாக உருவாக்க முயற்சிப்போம்.

சமச்சீரான வளர்ச்சி

புதுமையையும், புரட்சிகரமான மாறுதலையும் கல்வி, மருத்துவம், சமூக பொருளாதாரம் மற்றும் அனைத்து பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான வாழ்க்கையையும் வழங்கக்கூடிய திறன் மிகுந்த மாநிலமாக பீடுநடை போட எங்கள் ஆட்சி நல்ல முயற்சிகளை தொடங்கியுள்ளது.

சாதிமத பேதமின்றி அன்பையும், சமாதானத்தையும் சகோதர உணர்வையும், சமூக ஒற்றுமையையும் பேணி உயர்வோம். அனைத்து பிரிவு மக்களும் மாநிலத்தின் அனைத்து பிராந்தியமும் சமச்சீரான வளர்ச்சியடைய உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் பிறந்து வரும் 2017-ம் அண்டை வரவேற்போம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

வைத்திலிங்கம்

சபாநாயகர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கின்ற மக்கள் அனைவரும் சமூக பொருளாதார நிலையில் ஏற்றம் பெற்று விளங்கிட மலர்கின்ற 2017-ம் புத்தாண்டு வழி வகுக்கட்டும். புதுச்சேரி அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களை பயன்படுத்தி, வாழ்வாதார நிலைகளை வளமாக்கிக்கொள்வதுடன், உறுதிகொண்ட உள்ளத்துடன் ஒன்றுபட்டு நின்று தடைகளை தகர்த்து அயராது உழைத்து இன்னும் பல சிறப்புகளை பெற்றிட இப்புத்தாண்டில் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நமச்சிவாயம்

அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலக மக்கள் அனைவரும் ஒவ்வொரு புத்தாண்டையும் உற்சாகமாய் கொண்டாடி வரவேற்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டிலும் நடைபெறும் சம்பவங்கள், ஒவ்வொரு மனிதன் மனதிலும் பல்வேறு மாற்றத்தை உருவாக்குகின்றன. அந்த மாற்றங்கள் மனித குலத்திற்கு நன்மை பயக்கும் வண்ணம் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும்.

வளமான, வலிமையான, அமைதியான இந்திய தாய் திருநாட்டை உருவாக்க அனைவரும் அயராது பாடவேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
புதிதாய் பிறக்கின்ற ஆண்டில் புதுச்சேரி மாநிலம் மேலும் வளம் பெறவேண்டும். தன்னலமற்ற உழைப்பின் மூலம் தாய் நாட்டை உயர்த்த பாடுபடும் ஒட்டுமொத்த சமுதாய மக்களின் வாழ்க்கை தரம் உயர புத்தாண்டில் உறுதி ஏற்போம். மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி புதுச்சேரி மாநிலம் பொலிவுமிக்க மாநிலமாக திகழ அயராது பாடுபடுவோம்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஷாஜகான்

அமைச்சர் ஷாஜகான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்
கூறியிருப்பதாவது:-

புத்தாண்டின் தொடக்கம் முதல் புதுவை வாழ் மக்களின் வாழ்வில் வளமை ஏற்பட்டு வன்முறை அகன்று வறுமைகள் விலகி, எல்லா இல்லங்களிலும் மகிழ்ச்சி உண்டாக்கி அமைதி ஏற்பட இந்த புத்தாண்டு துணை செய்யட்டும்.
இந்த புதிய ஆண்டில் நாம் சாதிக்க வேண்டியதை பட்டியலிடுவோம். தனி மனித சுதந்திரம், தொழில் முறையின் அபரிதமான வளர்ச்சி, நமது புதுச்சேரி மாநிலத்தை பசுமை நிறைந்த தூய்மை மாநிலமாக மாற்றும் நடவடிக்கை போன்ற புதுச்சேரி அரசின் நல்ல திட்டங்கள் மக்களின் நலனுக்கும், மாநிலத்திற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் உறுதுணையாக நிற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கந்தசாமி

அமைச்சர் கந்தசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
செழிப்பு குறையாத விளை பொருட்களும், சிறந்த பெருமக்களும் செல்வத்தைத் தீய வழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும். அத்தகைய நாம் நாட்டின் தற்போதைய முன்னேற்றத்தை எண்ணி பெருமை கொண்டும், எதிர்கால வளர்ச்சிக்கான வழியில் நாம் பீடுநடை போட்டும் வரும் இத்தருணத்தில் உலகம் முழுமையும் கொண்டாட உள்ள புத்தாண்டு 2017, நம் நாட்டின் அனைத்து இன, மத, பிராந்திய மக்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

நாம் இதுவரை சாதித்த சாதனைகளை எண்ணி பெருமை கொள்வோம். சந்தித்த தீயவைகளை மறப்போம். சாதிக்க வேண்டியவற்றை நினைப்போம் என்று சூளுரைத்து 2017-ம் புத்தாண்டை வரவேற்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் எம்.பி.

ராதாகிருஷ்ணன் எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

மலர்கின்ற புத்தாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையை மனதில் கொள்வோம். 2017ம் ஆண்டு நம் வாழ்வில் குறைவில்லாத நன்மைகளை வழங்கி தீயவைகளை விலக்கி வளங்களையும், நலன்களையும் தரும் ஆண்டாக அமையட்டும். புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாத்து சுற்றுலாவை மேம்படுத்திட இந்த தருணத்தில் நாம் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ, அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.அனந்து ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story