டெல்லியில் 6, 7 தேதிகளில் நடைபெறும் பா.ஜ.க. தேசிய செயற்குழுவில் தமிழக விவசாயிகள் பிரச்சினைகளை பேசுவேன்; டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


டெல்லியில் 6, 7 தேதிகளில் நடைபெறும் பா.ஜ.க. தேசிய செயற்குழுவில் தமிழக விவசாயிகள் பிரச்சினைகளை பேசுவேன்; டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 1 Jan 2017 9:00 PM IST (Updated: 1 Jan 2017 9:00 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து பேசுவேன் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். முன்னாள் ராணுவ வீரர்கள் கூட்டம் தமிழக பா.ஜ.க.வில் முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் ம

சென்னை,

டெல்லியில் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து பேசுவேன் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

முன்னாள் ராணுவ வீரர்கள் கூட்டம்

தமிழக பா.ஜ.க.வில் முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் முதல் செயற்குழு கூட்டம் சென்னை கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் மாநில தலைவர் கர்னல் பிபி.பாண்டியன் தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் கேப்டன் ஜி.செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் தஞ்சை எஸ். ராமலிங்கம் வரவேற்று பேசினார். தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

மோடிக்கு பாராட்டு

கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில தீர்மானங்கள் வருமாறு:–

* கடந்த 42 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசால் காலம் கடத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ‘‘ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்’’ திட்டத்தை சொன்னது போல் செயல்படுத்தி காட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு முப்படையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

* மற்ற மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதை போல முன்னாள் ராணுவத்தினர் குடியிருக்க கூடிய வீட்டுக்கான வீட்டு வரி விலக்கு அளிக்குமாறு தமிழக அரசையும், சாலை சுங்கவரி விலக்கு அளிக்குமாறு மத்திய அரசை இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

* தமிழகத்தில் முன்னாள் ராணுவத்திற்கான வேலைவாய்ப்பில் கூடுதல் சதவீதம் தமிழக அரசு இடம் ஒதுக்க வேண்டும்.

* முன்னாள் ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில், மாநிலங்களவையில் முன்னாள் ராணுவ வீரர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழிசை பேட்டி

கூட்டம் முடிந்தவுடன் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைகளை குழு அமைத்து தீர்க்க வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். எனவே தமிழக அரசு வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்.

விவசாயிகள் பிரச்சினை, குறைகளை கேட்டறிவதற்காக நாளை மறுதினம்(நாளை) நாகை மாவட்டத்துக்கு செல்கிறேன். அங்கு விவசாய சங்க பிரதிநிதிகளை சந்திக்க உள்ளேன். டெல்லியில் 6, 7 ஆகிய தேதிகளில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பிரச்சினை பற்றி நான் பேசுவேன்.

தமிழக மீனவர்கள் படகுகளை இலங்கை அரசு நாட்டுடமையாக்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு அந்த படகுகளை மீட்பதற்காக சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story