கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதி ரூ.1,784 கோடி மத்திய அரசின் துணை குழு பரிந்துரை


கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதி ரூ.1,784 கோடி மத்திய அரசின் துணை குழு பரிந்துரை
x
தினத்தந்தி 2 Jan 2017 9:00 PM GMT (Updated: 2 Jan 2017 7:31 PM GMT)

வறட்சி நிவாரண நிதியாக கர்நாடகத்திற்கு ரூ.1,784 கோடி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசின் துணை குழு பரிந்துரை செய்துள்ளது.

பெங்களூரு,

வறட்சி நிவாரண நிதியாக கர்நாடகத்திற்கு ரூ.1,784 கோடி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசின் துணை குழு பரிந்துரை செய்துள்ளது.

ரூ.4,702 கோடி நிதி ஒதுக்க...

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 176 தாலுகாக்களில் 139 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. பருவமழை பற்றாக்குறையால் மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மாநில அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய குழு கர்நாடகம் வந்து வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு செய்தது.

மத்திய குழு வந்து சென்று 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்கிடையே கர்நாடக அரசு வறட்சியை ஆய்வு செய்து, மத்திய அரசிடம் ஏற்கனவே ஒரு மனுவை கொடுத்துள்ளது. அதில் தேசிய இயற்கை பேரிடர் நிதியில் இருந்து ரூ.4,702 கோடி நிதியை ஒதுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் பிரதமர் மோடியை சித்தராமையா தலைமையிலான அனைத்துக்கட்சி குழு டெல்லியில் நேரில் சந்தித்து மனு கொடுத்தது.

ரூ.1,784 கோடி நிதி ஒதுக்க...

கர்நாடகத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுவதாகவும், அதனால் வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.4,702 கோடி நிதியை ஒதுக்குமாறும் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த நிதியை மேலும் காலதாமதம் செய்யாமல் மிக விரைவாக ஒதுக்க வேண்டும் என்றும் சித்தராமையா கோரிக்கை விடுத்தார். முடிந்தவரை விரைவாக நிவாரண நிதியை ஒதுக்குவதாக பிரதமர் உறுதியளித்தார்.

இந்த நிலையில் வறட்சி தொடர்பான மத்திய அரசின் துணை குழு அரசுக்கு பரிந்துரை ஒன்றை செய்துள்ளது. அதில் கர்நாடகத்தில் வறட்சி நிவாரண பணிகளுக்கு ரூ.1,784 கோடி ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. 

Next Story