சென்னை துறைமுகம் – மதுரவாயல் திட்டத்துக்கு தமிழக அரசு முழு ஆதரவு; மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
சென்னை துறைமுகம் – மதுரவாயல் திட்டத்துக்கு தமிழக அரசு முழு ஆதரவை அளிப்பதாக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்ததாக மத்திய இணை–மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். முதல்–அமைச்சருடன் சந்திப்பு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செ
சென்னை,
சென்னை துறைமுகம் – மதுரவாயல் திட்டத்துக்கு தமிழக அரசு முழு ஆதரவை அளிப்பதாக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்ததாக மத்திய இணை–மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
முதல்–அமைச்சருடன் சந்திப்புசென்னை தலைமைச் செயலகத்தில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்காக நேற்று பகல் 12.55 மணி அளவில் மத்திய இணை–மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். அவருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்ற அதிகாரிகள், முதல்–அமைச்சர் அறைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, மத்திய சாலைபோக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை–மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பூச்செண்டு கொடுத்து, புத்தாண்டு வாழ்த்து கூறினார்.
பின்னர் இருவரும் பகல் 2.40 மணி வரை ஆலோசனை நடத்தினார்கள். காமராஜர் துறைமுக தலைவர் பாஸ்கராச்சார் உள்ளிட்ட துறைமுக அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
குளச்சல் துறைமுகம்பின்னர் தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு மத்திய இணை–மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சாலை போக்குவரத்து மற்றும் கப்பல், துறைமுகம் சம்பந்தமாக தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தோம். குளச்சல் துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இதற்கான முழு ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என்று முதல்–அமைச்சரிடம் எடுத்துக் கூறப்பட்டது.
அதற்கு, முழு ஆதரவை தமிழக அரசு சார்பில் தருவதாக முதல்–அமைச்சர் கூறினார். குறிப்பாக துறைமுகம் அமைக்கப்படும் போது மீனவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதே நிலைப்பாட்டில் தான் மத்திய அரசும் இருப்பதால் மீனவர்கள் பாதிக்காத வகையில் துறைமுகம் அமைக்கும் பணி நடக்கும்.
துறைமுகம்–மதுரவாயல் சாலைசென்னை துறைமுகம் – மதுரவாயல் மற்றும் பல்வேறு சாலைதிட்டங்கள் மாற்று வழித்தடங்கள் குறித்தும் விவாதித்தோம். இதுகுறித்து முழு அறிக்கை கொடுக்கப்பட்டு, அதற்கு முழு ஆதரவு அளிப்பதுடன் உரிய நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு தயாராக இருப்பதாக முதல்–அமைச்சர் கூறினார். துறைமுக சாலை அமைப்பதற்கும் ஒப்பு கொள்ளப்பட்டது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலையை, மத்திய அரசு ஏற்று நடத்த தயாராக உள்ளது என்பதை தெரிவித்தோம். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடியில் அந்த திட்டம் துரிதப்படுத்தப்படும். காலதாமதம் ஏற்பட்டால் மத்திய அரசின் ‘பாரதமாதா’ திட்டத்தின் கீழ் மத்திய அரசே ஏற்று கிழக்கு கடற்கரை சாலையை அமைக்கும் என்று சொன்னோம்.
தேசிய நெடுஞ்சாலைதூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரி இறக்குவதில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மத்திய அரசு எடுக்க தயாராக உள்ளது என்பதையும் எடுத்து கூறினோம். இவ்வாறு அவர் கூறினார்.