அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிப்பதற்கு தடைகேட்ட வழக்கு முடித்து வைப்பு; ஐகோர்ட்டு உத்தரவு
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிப்பதற்கு தடை கேட்டு ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. தடை வேண்டும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்ய சபா எம்.பி. சசிகலா புஷ்பா, அவரது கணவர்
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிப்பதற்கு தடை கேட்டு ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
தடை வேண்டும்அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்ய சபா எம்.பி. சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், ‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவை தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், சசிகலா புஷ்பா, அவரது கணவர் ஆகியோரது மனுவை தள்ளுபடி செய்யக்கோரி ஒரு மனு தாக்கல் செய்தார்.
தீர்ப்பு தள்ளிவைப்புஅதில், ‘அ.தி.மு.க.விற்கும், சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. சசிகலா புஷ்பா கட்சியை விட்டு நீக்கப்பட்டவர். மேலும், அ.தி.மு.க. துணை விதிகளின்படி, உள்கட்சி விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரும் உறுப்பினர், தானாகவே அந்த உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார். எனவே, இவர்கள் இருவரும் தாக்கல் செய்த இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இருதரப்பு வக்கீல்களும் வாதம் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 23–ந் தேதி உத்தரவிட்டார்.
முடித்து வைப்புஇந்த நிலையில், இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி கே.கல்யாண சுந்தரம் நேற்று பிறப்பித்தார். அதில், ‘சசிகலா புஷ்பா, லிங்கேஸ்வர திலகம் ஆகியோரது மனுக்கள் நிராகரிக்கக்கோரி அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக்கொள்கிறேன். இந்த உத்தரவின் அடிப்படையில், சசிகலா புஷ்பா, லிங்கேஸ்வர திலகம் ஆகியோரது மனுக்களை முடித்து வைத்து உத்தரவிடுகிறன்‘ என்று கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க. வக்கீல்கள், ஐகோர்ட்டு முன்பு நேற்று பட்டாசு வெடித்து கொண்டாடினர்.