அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் முழுமையான ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்; மு.க.ஸ்டாலின் கேள்விக்கு, அமைச்சர் பதில்


அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் முழுமையான ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்; மு.க.ஸ்டாலின் கேள்விக்கு, அமைச்சர் பதில்
x
தினத்தந்தி 2 Jan 2017 7:57 PM GMT (Updated: 2 Jan 2017 7:57 PM GMT)

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் முழுமையான ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் காமராஜ் பதிலளித்துள்ளார். ரூ.318 கோடி நிதி என்ன ஆனது? இதுதொடர்பாக உணவு மற்றும் நுகர

சென்னை,

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் முழுமையான ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் காமராஜ் பதிலளித்துள்ளார்.

ரூ.318 கோடி நிதி என்ன ஆனது?

இதுதொடர்பாக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

குடும்ப அட்டைகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, ஸ்மார்ட் கார்டு திட்டத்தை செயல்படுத்தாமல் மெத்தனம் காட்டுவதா? என்றும், ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 318 கோடி ரூபாய் நிதி என்ன ஆனது? என்றும் மனம் போன போக்கில் வினாக்களை அள்ளி வீசியிருக்கிறார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்.

புதிய விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையில் கணினிமயமான காலத்திற்கேற்ப பொதுவினியோகத் திட்டத்தை நவீனப்படுத்தி, போலி குடும்ப அட்டைகளை முழுவதுமாக களைந்து, உரியவர்களுக்கு மட்டுமே பொருட்கள் சென்றடையும் வகையில் மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) தயாரித்து வழங்கிட ஜெயலலிதா ஆணையிட்டார்.

ஸ்மார்ட் கார்டு

முழுமையாக கணினி வழி கண்காணித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டத்தினை செயல்படுத்திட ரூ.318.40 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. இந்த 318 கோடி ரூபாய் நிதிதான் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர்.

இப்பணிகளை மேற்கொள்ள 18.9.2014 அன்று விலைப்புள்ளி கோரப்பட்டு, அதன் அடிப்படையில், பொது வினியோகத் திட்டத்தை முழுவதும் கணினிமயமாக்குதலுக்கான ஒப்பந்தம் 2.3.2015 அன்று மேற்கொள்ளப்பட்டது.

ஸ்மார்ட் கார்டு என்னும் மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு மத்திய அரசின் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டோடு ஆதார் அட்டைகளுடன் ஒருங்கிணைத்து, அதன் அடிப்படையில்தான் ஸ்மார்ட் கார்டு வழங்க முடியும். தமிழகத்தில் உள்ள 34,686 நியாயவிலைக் கடைகளுக்கும் மின்னணு எந்திரங்கள் வழங்கப்பட்டுவிட்டன.

மின்னணு எந்திரத்தில் பதிவு

மொத்தமுள்ள 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 386 குடும்ப அட்டைகளில் 1 கோடியே 90 லட்சத்து 35 ஆயிரத்து 89 குடும்ப அட்டைகள் மின்னணு எந்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்குமான ஆதார் எண்கள் முழுமையாக பதிவு செய்த குடும்ப அட்டைகள் 92 லட்சத்து 51 ஆயிரத்து 646 (49 சதவீதம்), குடும்ப அட்டையில் ஒரு உறுப்பினர் ஆதார் எண் மட்டும் பதிவு செய்த குடும்ப அட்டைகள் 87 லட்சத்து 32 ஆயிரத்து 774 (46 சதவீதம்), முழுமையாக ஆதார் எண்கள் பதிவு செய்யாத குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 10 லட்சத்து 50 ஆயிரத்து 669 ஆக உள்ளது.

விரைவில் வழங்கப்பட உள்ளது

ஆதார் எண்கள் பதிவு அடிப்படையிலேயே ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட முடியும் என்பதால் முழுமையான ஆதார் அட்டை பதிவு பெறுவதற்காக 2016 டிசம்பர் முதல் வீடு வீடாக சென்று அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் முழுமையாக ஆதார் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நடைமுறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் முழுமையான ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. அப்பொழுது இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுவதுமாக செலவு செய்யப்படும்.

இன்னும் ஒரு சில மாதங்களில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்கான பணிகள் வெளிப்படையாக, வெகு வேகமாக, நடைபெறுவதை அறிந்துகொண்டு ‘‘நான் சொன்னேன் சொன்னதால்தான் நடந்தது’’ என்று கூறுவதற்காகவே ஒரு தவறான அறிக்கையை வெளியிடுவது எதிர்க் கட்சித் தலைவருக்கு அழகா என்று வினவ விரும்புகிறேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Next Story