தமிழக முதல்–அமைச்சர் தேர்வில் எங்கள் தலையீடு எதுவும் இல்லை; மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேட்டி
தமிழக முதல்–அமைச்சர் தேர்வில் எங்கள் தலையீடு எதுவும் இல்லை என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார். மத்திய மந்திரி வெங்கையா நாயுடு சென்னையில் நேற்று தமிழக பா.ஜனதா கட்சி அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியத
சென்னை,
தமிழக முதல்–அமைச்சர் தேர்வில் எங்கள் தலையீடு எதுவும் இல்லை என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.
மத்திய மந்திரி வெங்கையா நாயுடு சென்னையில் நேற்று தமிழக பா.ஜனதா கட்சி அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வட்டி விகிதம்மக்கள் வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப பிரதமர் மோடி செயல்படுகிறார். பண மதிப்பு ரத்து நடவடிக்கையால் அனைத்து பணமும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்து விட்டன. யார் கணக்கில் கூடுதலாக பணம் வந்துள்ளது என்பதை கணக்கிட்டு நடவடிக்கை எடுக்கப்படும். வங்கிகளுக்கு எவ்வளவு ரொக்கப்பணம் வந்துள்ளது என்பதை ரிசர்வ் வங்கி விரைவில் அறிவிக்கும்.
கடன்களுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது. இது ஏழை, எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அடைய கூடிய விஷயம். இனி வரி கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதிய இந்தியா உருவாவதில் நேர்மையானவர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
தலையீடு இல்லைகேள்வி:– ஏ.டி.எம். மையங்களில் பணம் கிடைக்கவில்லை என்று மக்கள் கூறுகிறார்களே?
பதில்:– மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று கூறுவது தவறு. வங்கிகளிலோ, ஏ.டி.எம். மையங்களிலோ முன்பு இருந்த சூழ்நிலை மாறியிருக்கிறது. எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு உற்று நோக்கியே வருகிறது.
கேள்வி:– முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் தமிழக அரசையும், மத்திய அரசையும் விமர்சனம் செய்துள்ளாரே?
பதில்:– ராமமோகன ராவ் பேசியது தவறு என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே கூறுகிறார்கள். தமிழகம் பாதுகாப்பாக தான் இருக்கிறது.
கேள்வி:– முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மத்திய அரசின் தலையீடு இருந்ததாக கூறுகிறார்களே?
பதில்:– அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இது அவர்கள் கட்சியின் முடிவு. இதில் எங்கள் தலையீடு எதுவும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு என்ற முறையில் மத்திய அரசு உதவிகளை செய்து வருகிறது.
மத்திய அரசு பதில் அளிக்கும்கேள்வி:– முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:– ஓ.பன்னீர்செல்வம் 2 முறை ஜெயலலிதாவால் முதல்–அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது ஜெயலலிதா இறந்த பிறகு அவர் பதவியேற்று இருக்கிறார். அதற்குள் அவரின் செயல்பாட்டை எப்படி கூற முடியும்.
கேள்வி:– அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா முதல்–அமைச்சராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அ.தி.மு.க. அமைச்சர்கள் கூறுகிறார்களே?
பதில்:– யார் முதல்–அமைச்சராக இருக்க வேண்டும் என்பது அக்கட்சியின் முடிவு. இதில் நாங்கள் கருத்து சொல்ல முடியாது. இது உள்கட்சி விவகாரம்.
கேள்வி:– பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தன்னுடைய ‘லெட்டர் பேடில்’, சசிகலா முதல்–அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறாரே?
பதில்:– அவர் அதை பயன்படுத்தி இருக்கக்கூடாது. தவிர்த்து இருக்க வேண்டும்.
கேள்வி:– ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசுக்கு கோர்ட்டு நோட்டீசு அனுப்பியிருக்கிறதே?
பதில்:– இதற்கு மத்திய அரசு பதில் அளிக்கும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.