மும்பை நகர வளர்ச்சி குறித்த முதல்-மந்திரி பட்னாவிஸ் பேச்சை விமர்சித்து சுவரொட்டிகள் பா.ஜனதாவினர் கொந்தளிப்பு


மும்பை நகர வளர்ச்சி குறித்த முதல்-மந்திரி பட்னாவிஸ் பேச்சை விமர்சித்து சுவரொட்டிகள் பா.ஜனதாவினர் கொந்தளிப்பு
x
தினத்தந்தி 3 Jan 2017 2:13 AM IST (Updated: 3 Jan 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

மும்பை நகர வளர்ச்சி குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேச்சை விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மும்பை,

மும்பை நகர வளர்ச்சி குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேச்சை விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது பா.ஜனதா கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்-மந்திரி பேச்சு

நாக்பூரில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “நான் முதல்-மந்திரி பதவியில் இருந்து வெளியேறும்போது, மும்பையை சேர்ந்த மக்கள் நாக்பூரில் இருந்து வந்த நபர் மும்பை நகரத்தை அடியோடு மாற்றிவிட்டார் என்று சொல்வார்கள்” என்றார்.

இந்த பேச்சை கேலி செய்யும் வகையில் மும்பை நகரின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் எந்த கட்சியின் சார்பில் ஒட்டப்பட்டுள்ளன என்று தெரியவில்லை.

கொந்தளிப்பு

இது பா.ஜனதா கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மும்பை மாநகராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா இடையே கடும் பனிபோர் நிலவி வருகிறது. இருகட்சியினரும் ஒருவரை, ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

சிவசேனாவின் கோட்டையாக கருதப்படும் மும்பை மாநகராட்சியை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜனதாவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக சிவசேனாவினர் இந்த சுவரொட்டிகளை ஒட்டியிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுகுறித்து பா.ஜனதா மும்பை பிரிவு தலைவர் ஆசிஷ் செலார் கூறுகையில், “எங்களது வளர்ச்சி திட்டங்களால், அச்சம் கொண்ட சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்” என்றார். 

Next Story