காங்கிரஸ் அரசின் பழைய திட்டங்களையே பிரதமர் மோடி அறிவிக்கிறார் சிவசேனா குற்றச்சாட்டு


காங்கிரஸ் அரசின் பழைய திட்டங்களையே பிரதமர் மோடி அறிவிக்கிறார் சிவசேனா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 Jan 2017 9:03 PM GMT (Updated: 2 Jan 2017 9:03 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் அரசின் பழைய திட்டங்களையே அறிவிக்கிறார் என சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.

மும்பை,

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பழைய திட்டங்களையே அறிவிக்கிறார் என சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.

பிரதமர் உரை

புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெலிவிஷன் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது விவசாயிகள், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு புதிய திட்டங்களை வெளியிட்டார். இந்த உரை குறித்து பா.ஜனதாவின் கூட்டணியில் உள்ள சிவசேனா தனது கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் விமர்சித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

பணப்பிரச்சினையால் அடிபட்டு காயத்தில் தவிக்கும் தங்களுக்கு மோடி தைலம் பூசுவார் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பிரதமர் மோடி தன் உரையில் அவர்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதாகவே தெரியவில்லை. 400-க்கும் மேற்பட்டோர் பணத்திற்காக வரிசையில் காத்திருந்து தங்களின் உயிரை இழந்துள்ளனர். அவர்களின் குடும்பம் அரசாங்கத்தை சபித்துக்கொண்டிருக்கிறது.

பழைய திட்டம்

பிரதமர் மோடி அறிவித்த பல திட்டங்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில் அறிவிக்கப்பட்ட பழைய திட்டங்கள் ஆகும். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் அறிவிக்கப்பட்டது 2013 -ம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் தாங்கள் சந்தித்துவரும் தினசரி பிரச்சினைக்கு முடிவு வந்துவிட்டதா? என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து விலைமதிப்பற்ற பதிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உண்மையை சொல்லவேண்டும் என்றால் பிரதமருக்கு கூட இதற்கான விடை தெரியாது. அதுமட்டுமல்ல பணத்தை மதிப்பிழக்க செய்ததால் எவ்வளவு கருப்பு பணம் பிடிபட்டது என்பதை கூட அவர் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story