ஜனாதிபதி நாளை வருகை: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு


ஜனாதிபதி நாளை வருகை:  சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 1 March 2017 5:06 AM IST (Updated: 1 March 2017 5:06 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை (வியாழக்கிழமை) சென்னை வருகிறார். இதனையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஆலந்தூர்,

சென்னை தாம்பரம் விமானப்படை விழா, அடையாறில் இந்திய பெண்கள் விழா ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை (வியாழக்கிழமை) சென்னை வருகிறார்.

இதனையொட்டி நாளை மாலை 6.50 மணிக்கு கொச்சியில் இருந்து தனி விமானத்தில் ஜனாதிபதி புறப்படுகிறார். இரவு 8.05 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்தடைகிறார். இரவு 8.15 மணிக்கு பழைய விமான நிலையத்தில் வரவேற்பு முடிந்ததும் குண்டு துளைக்காத காரில் கிண்டி கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு செல்கிறார். இரவு அங்கேயே தங்குகிறார்.

விமானப்படை விழா

மறுநாள் (3-ந் தேதி) காலை 8.35 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு காலை 9 மணிக்கு தாம்பரம் விமானப்படை தளம் வருகிறார். அங்கு நடக்கும் விழாவில் கலந்து கொண்டு பதக்கங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். விழா முடிந்ததும் காலை 11.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு அடையாறு வந்து சேருகிறார்.

அங்கு நடைபெறும் இந்திய பெண்கள் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். பகல் 12.45 மணிக்கு விழா முடிந்து காரில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையத்திற்கு பகல் 1.05 மணிக்கு வந்து சேருகிறார்.

வழியனுப்பு நிகழ்ச்சிகள் முடிந்ததும் பகல் 1.15 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

5 அடுக்கு பாதுகாப்பு

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வருவதை தொடர்ந்து டெல்லியில் இருந்து சிறப்பு அதிகாரிகள் கொண்ட 60 பேர் குழு சென்னை வந்துள்ளது. இவர்கள் சென்னை விமான நிலையத்தில் விமான ஆணைய அதிகாரிகள், விமான நிலைய போலீசார், மத்திய தொழிற்படை அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இதனையடுத்து விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story