அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவி வகிக்க தடை கேட்ட வழக்கு தள்ளுபடி


அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவி வகிக்க தடை கேட்ட வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 1 March 2017 5:08 AM IST (Updated: 1 March 2017 5:07 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவி வகிக்க தடைகேட்ட வழக்கு திரும்பப்பெறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கோவையை சேர்ந்தவர் கே.சி.பழனிசாமி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–

அதிகாரம் இல்லை

அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய நாள் முதல் உறுப்பினராக உள்ளேன். 1984–1988–ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.யாகவும், அதன்பின்னர் எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளேன்.

அ.தி.மு.க. விதிகளின்படி, கட்சியில் உள்ள பல்வேறு அணிகளின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்யவேண்டும். இந்த நிலையில், அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளராக, சசிகலா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29–ந் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இவரை இப்பதவிக்கு தேர்வு செய்துள்ளனர்.

இந்த முடிவு, கட்சியின் விதி 20–க்கு எதிராக உள்ளது. சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது.

திரும்பப்பெற அனுமதி

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தகுந்த நபரை தேர்வு செய்யும் விதமாக உட்கட்சி தேர்தலை நடத்த சுதந்திரமான, அச்சம் இல்லாத ஒரு நபரை தேர்தல் அதிகாரியாக நியமிக்கவேண்டும். அதுவரை பொதுச்செயலாளராக செயல்பட சசிகலாவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடந்த ஜனவரி 20–ந் தேதி கோரிக்கை மனு அனுப்பியும், இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என் புகார் மனுவை பரிசீலிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை திரும்பப்பெறுவதாக மனுதாரர் வக்கீல் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை திரும்பப்பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story