நெடுவாசலில் நடக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும்: முதல் அமைச்சர் பழனிச்சாமி வேண்டுகோள்


நெடுவாசலில் நடக்கும் போராட்டத்தை  கைவிட வேண்டும்: முதல் அமைச்சர் பழனிச்சாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 March 2017 3:09 PM IST (Updated: 1 March 2017 3:08 PM IST)
t-max-icont-min-icon

நெடுவாசலில் நடக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் தெரிவித்துக்கொள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 15-ந் தேதி அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் எனும் கிராமத்திலும் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அங்கு இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 16-ந் தேதி நெடுவாசல் பகுதி பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கினர்.
 
14- வது நாளாக இன்று போராட்டம் நீடித்து வரும் நிலையில்,  முதல் அமைச்சர் பழனிச்சாமியை சந்தித்த நெடுவாசல் போராட்டகுழுவினர்  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். முதல் அமைச்சரை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நெடுவாசல் போராட்டக்குழுவினர், முதல்வரின் பதில் திருப்திகரமாக இருந்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் ஆலோசனை செய்த பின்னர், போராட்டத்தை கைவிடுவதா? தொடர்வதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். 

இந்த நிலையில், முதல் அமைச்சர் பழனிச்சாமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதல் அமைச்சர் பழனிச்சாமி கூறுகையில்,” விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்பதால் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது.  எனவே,  நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் அச்சப்பட தேவையில்லை. அரசின் உறுதியை ஏற்று நெடுவாசலில் நடக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும். நெடுவாசலில் வணிக ரீதியான பெட்ரோலிய சுரங்க குத்தகைக்கு உரிமம்  வழங்கவில்லை. விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story