மாத தொடக்கத்திலேயே ஏமாற்றம் பொருட்கள் இல்லாததால் ரே‌ஷன் கடைகள் வெறிச்சோடின


மாத தொடக்கத்திலேயே ஏமாற்றம் பொருட்கள் இல்லாததால் ரே‌ஷன் கடைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 1 March 2017 10:27 PM IST (Updated: 1 March 2017 10:26 PM IST)
t-max-icont-min-icon

பொருட்கள் இல்லாததால் ரே‌ஷன் கடைகள் வெறிச்சோடின.

சென்னை,

தமிழக அரசின் பொதுவினியோக திட்டத்தின் கீழ் உணவு மற்றும் கூட்டுறவு துறை சார்பில் 34 ஆயிரத்து 686 ரே‌ஷன் கடைகள் இயங்கி வருகின்றன. 2 கோடியே 3 லட்சம் ரே‌ஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 1 கோடியே 91 லட்சத்து 53 ஆயிரத்து 352 அட்டைதாரர்கள் இலவச அரிசி மற்றும் மானியவிலையில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் ரே‌ஷன் கடைகளில் மானியவிலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு(ரூ.30), ஒரு கிலோ உளுந்தம் பருப்பு(ரூ.30), ஒரு கிலோ பாமாயில்(ரூ.25) ஆகியவை திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்திலும் கை வைக்கப்பட்டு 10 கிலோ இலவச அரிசியும், 10 கிலோ இலவச கோதுமையும் வழங்கப்பட உள்ளது.

ஏழை–எளிய மக்கள் கவலை

ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மூலம் குடும்பம் நடத்தி வரும் ஏழை–எளிய மக்களுக்கு இந்த அதிரடி மாற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:–

வெளிச்சந்தையில் அதிக பணம் கொடுத்து பொருட்களை வாங்க முடியாததால், ரே‌ஷன் கடைகளில் மானியவிலையில் வழங்கப்பட்ட பருப்பு வகைகள், பாமாயில் எண்ணெயை பயன்படுத்தி வந்தோம். தற்போது இந்த பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் இட்லி, தோசை, சாம்பார் போன்ற உணவுக்கு எங்கள் வீடுகளில் விடை கொடுத்துவிட்டோம்.

தமிழர்களின் உணவு அரிசி சாப்பாடு தான். ஆனால் அரிசியின் அளவை குறைக்கும் முடிவு எங்களை பட்டினியில் தள்ளப் போகிறது. கோதுமை வடமாநில உணவு. அதை வாங்கி அரைப்பதற்கும் செலவு ஆகும். பருப்பு வகைகள், பாமாயில், இலவச அரிசி ஆகிய பொருட்கள் வாங்குவதற்கு தான் ரே‌ஷன் அட்டையை நாங்கள் பயன்படுத்தி வந்தோம். ஆனால் அந்த பொருட்கள் கிடைக்காது என்கிற நிலை ஏற்படுகிற போது எதற்கு ரே‌ஷன் அட்டை?. இந்தநிலையில் ‘ஸ்மார்ட் கார்டு’ வர போகிறது என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஊழியர்கள் வேதனை

மாதத்தின் முதல் நாளான நேற்று பெரும்பாலான ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்க சென்ற மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எந்த பொருட்களும் வரவில்லை என்று ஊழியர்களிடம் இருந்து பதில் மட்டுமே கிடைத்தது. பொருட்கள் கிடைக்காத ஆத்திரத்தில் பொதுமக்கள் சிலர் ஊழியர்களை வசைப்பாடி சென்றனர்.

இதுகுறித்து ரே‌ஷன் கடை ஊழியர்கள் சிலர் மனவேதனையுடன் கூறியதாவது:–

ரே‌ஷன் கடைகளுக்கு முறையாக பொருட்கள் வருவது இல்லை. இதனால் மக்களுடைய கோபத்துக்கு நாங்கள் தான் ஆளாகி வருகிறோம். இது ஒரு புறம் இருக்க சிந்தாமணி கூட்டுறவு சங்கம் சார்பில் மாதந்தோறும் ரூ.1 லட்சம் அளவுக்கு மளிகை பொருட்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தநிலையில் விற்பனை ஆகாமல் சேதமடையும் பொருட்களுக்கான செலவை எங்கள் சம்பள தொகையில் பிடித்தம் செய்கிறார்கள்.

மண்எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் ரே‌ஷன் கடைக்கு வரும் போதே எடை குறைவாக தான் இருக்கிறது. ஆனால் அதற்கும் எங்களுடைய சம்பள தொகையில் இருந்து தான் பிடித்தம் செய்கிறார்கள். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story