ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரி மற்றொரு வழக்கு; ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு


ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரி மற்றொரு வழக்கு; ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 1 March 2017 7:49 PM GMT (Updated: 1 March 2017 7:49 PM GMT)

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டத்தலைவர் சி.குமரன்.

சென்னை,

ஜெயலலிதாவின் சமாதியை அரசு செலவில் கட்டக்கூடாது என்றும், அவரது புகைப்படங்களை அரசு அலுவலகத்தில் இருந்து அகற்றவேண்டும் என்றும் தொடரப்பட்ட மற்றொரு வழக்கின் விசாரணையை 20–ந் தேதிக்கு தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–

பாவச்செயல்

ஒருகாலத்தில் ஊழல் என்பது சமுதாயத்தில் மிகப்பெரிய பாவச்செயலாகவும், ஊழல் செய்பவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும் கருதப்பட்டனர். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஊழல்வாதிகள் சமுதாயத்தில் மிகப்பெரிய பதவிகளை அலங்கரிக்கின்றனர்.

தமிழக முதல்–அமைச்சராக 1991–1996–ம் ஆண்டுகளில் ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிறை தண்டனை

இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டு வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனையையும், அபராதத்தையும் கடந்த பிப்ரவரி 14–ந் தேதி உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

ஆனால், அரசு அலுவலகங்களில், நிகழ்ச்சிகளில், திட்டங்களில் ஜெயலலிதாவின் புகைப்படம் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.

மேலும், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதி அரசு செலவில் நினைவு சின்னமாக மாற்றப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டினால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நபரின் புகைப்படங்களை, அரசு அலுவலகங்களில் வைத்தால், நாளை இதேபோன்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் தங்களது புகைப்படத்தையும் வைக்கவேண்டும் என்று உரிமை கொண்டாட தொடங்கி விடுவார்கள்.

அகற்ற வேண்டும்

அதனால், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவகத்தை அரசு செலவில் கட்டக்கூடாது என்றும், அரசு அலுவலகங்கள், அரசு திட்டங்கள் ஆகியவற்றில் உள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்தையும், பெயரையும் அகற்ற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுடன், 20–ந் தேதி இந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று உத்தரவிட்டனர்.


Next Story