ரேஷன் கடைகளில் பருப்பு வகைகள், பாமாயில் விற்பனை நிறுத்தம் ஏன்?


ரேஷன் கடைகளில் பருப்பு வகைகள், பாமாயில் விற்பனை நிறுத்தம் ஏன்?
x
தினத்தந்தி 2 March 2017 2:02 AM IST (Updated: 2 March 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் பருப்பு வகைகள், பாமாயில் விற்பனையை நிறுத்தியது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் உணவு மற்றும் கூட்டுறவு துறை சார்பில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் சர்க்கரை, கோதுமை, மண்எண்ணெய் ஆகிய பொருட்கள் மானியவிலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெளிச்சந்தையில் உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி சென்னையிலும், அதே ஆண்டு மே மாதத்தில் பிற மாவட்டங்களிலும் சிறப்பு பொது வினியோக திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒவ்வொரு மாதமும் 13 ஆயிரத்து 450 மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 7 ஆயிரம் மெட்ரிக் டன் உளுந்தம் பருப்பு, 15 ஆயிரம் கிலோ லிட்டர் செறிவூட்டப்பட்ட எண்ணெய் (பாமாயில்) ஆகியவற்றை அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கொள்முதல் செய்து மானிய விலையில் வழங்கியது.

அடியோடு நிறுத்தம்

அதன்படி ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.30-க்கும், உளுந்தம் பருப்பு ரூ.30-க்கும், செறிவூட்டப்பட்ட எண்ணெய் (பாமாயில்) ஒரு கிலோ ரூ.25-க்கும் மானியவிலையில் விற்பனை செய்யப்பட்டது.

சிறப்பு பொது வினியோக திட்டத்தை கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு சுமார் ரூ.1,158 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் 2016-17-ம் நிதி ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால் பருப்பு வகைகள், செறிவூட்டப்பட்ட எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த பருப்பு வகைகள், செறிவூட்டப்பட்ட எண்ணெய் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

அரிசிக்கு பதில் கோதுமை

தமிழக அரசின் பொதுவினியோக திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு (பச்சை ரேஷன் கார்டு உள்ளவர்கள்) பச்சரிசி, புழுங்கல் அரிசி தலா 10 கிலோ இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு மானிய அரிசி விலையை 8 ரூபாய் 30 பைசாவில் இருந்து 22 ரூபாய் 54 பைசாவாக அதிரடியாக உயர்த்தி உள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 700 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் அளவை குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 10 கிலோ இலவச அரிசியும் (புழுங்கல், பச்சரிசி தலா 5 கிலோ) 10 கிலோ இலவச கோதுமையும், கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 15 கிலோ இலவச அரிசியும், 5 கிலோ இலவச கோதுமையும் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளச்சந்தையில் பதுக்கல்?

இதுகுறித்து தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் (சி.ஐ.டி.யு.) ஏ.கிருஷ்ணமூர்த்தி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அமல்படுத்திய உணவு பாதுகாப்பு சட்டம் மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் பொது வினியோக திட்டத்தை சிதைத்துள்ளது. அதன்படி தமிழக அரசின் பொதுவினியோக திட்டத்துக்கு மாதந்தோறும் 3.23 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்பட்டாலும், மத்திய அரசு 2.96 லட்சம் மெட்ரிக் டன் அளவு தான் ஒதுக்கீடு செய்கிறது. இதனால் தமிழக அரசு வழங்கி வரும் இலவச அரிசியை நம்பி குடும்பம் நடத்தி வரும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கூடுதல் செலவு என்று கருதி பருப்பு வகைகள், செறிவூட்டப்பட்ட எண்ணெய் விற்பனையை நிறுத்தி இருப்பதன் மூலம் வெளிச்சந்தையில் அவற்றின் விலை கிடுகிடுவென உயரும். செயற்கையான விலை ஏற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கள்ளச்சந்தையில் பொருட்கள் பதுக்கலும் அதிகரிக்கும்.

சர்க்கரை விலை உயரும்

அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் ஆகிய பொருட்களுக்கு மட்டுமின்றி சர்க்கரை, மண்எண்ணெய் ஆகிய பொருட்கள் வினியோகத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக 36 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் சர்க்கரை தேவைப்படுகிறது.

இதில் மத்திய அரசு மாதந்தோறும் 10 ஆயிரத்து 820 மெட்ரிக் டன் சர்க்கரை ஒதுக்கீடு செய்து வந்த நிலையில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், வருகிற ஏப்ரல் மாதம் முதல் மத்திய அரசின் மானியம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரேஷன் கடைகளில் 13 ரூபாய் 50 பைசாவுக்கு மானியவிலையில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை விலை உயரக்கூடும். வெளிச்சந்தையிலும் சர்க்கரை விலை உயரும்.

மண்எண்ணெய்க்கும் ஆபத்து

ஏழை-எளிய மக்கள் அன்றாடம் அடுப்பு எரிக்கவும், விளக்கு ஏற்றவும் மண்எண்ணெயை பயன்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மாதாந்திர மண்எண்ணெய் தேவை 59 ஆயிரம் கிலோ லிட்டர் ஆகும். கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 59 ஆயிரத்து 780 கிலோ லிட்டர் மண்எண்ணெய் ஒதுக்கீடு செய்து வந்த மத்திய அரசு படிப்படியாக குறைத்து கடந்த ஆண்டு 25 ஆயிரத்து 704 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து வருகிற ஏப்ரல் மாதம் வரை மண்எண்ணெய் விலையை மாதம் ஒன்றுக்கு லிட்டருக்கு 25 பைசா வீதம் உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி 10 மாதத்தில் லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசா உயர்த்தப்பட்டுவிடும்.

இதுபோன்ற நடவடிக்கையால் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் மண்எண்ணெய் வினியோகமும் நிறுத்தப்படும் சூழல் ஏற்படும்.

ரூ.25 ஆயிரம் கோடி சேமிப்பு

பொது வினியோக திட்டம் தொடர்பாக மத்திய அரசு சாந்தகுமார் எம்.பி., தலைமையிலான குழு இந்திய உணவு கழகத்தை 4 பிரிவுகளாக பிரிக்கவும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட 52 நகரங்களை தேர்வு செய்து உணவு பொருட்களுக்கு மாறாக வங்கியில் பணம் நேரடியாக செலுத்தவும் சிபாரிசு செய்துள்ளது.

வங்கியில் நேரடியாக பணம் செலுத்துவதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.25 ஆயிரம் கோடி சேமிப்பு ஏற்படும் என்று ‘கிரிசில்’ எனும் தரச்சான்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு பொது வினியோக திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவோம் என்று அறிக்கை வெளியிட்டு வருகிறது.

சீர்படுத்தப்படுமா?

தமிழக அரசின் பொதுவினியோக திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 500 கோடியாக உள்ளது. மத்திய அரசு கொடுத்து வரும் நெருக்கடியில் மாநில அரசின் பொதுவினியோக திட்டம் சீர்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவினியோக திட்டத்தை மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பாதுகாத்திட்ட வேண்டும் என்று ஏழை-எளிய, நடுத்தர மக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story