தீபா ஆதரவாளர்கள் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையை ஏற்க வேண்டும்


தீபா ஆதரவாளர்கள் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையை ஏற்க வேண்டும்
x
தினத்தந்தி 2 March 2017 2:20 AM IST (Updated: 2 March 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

தீபா ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

சென்னை,

ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் நேற்று சென்னையில் பன்னீர்செல்வம் இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்தவித விதிமீறலும் நடைபெறவில்லை என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளாரே?

பதில்:– எங்களை பொறுத்தவரையில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்து இருக்கிறோம். தேர்தல் ஆணையம் 28.2.2017–க்குள் சசிகலா தரப்பில் இயங்கும் இயக்கம் பதில் தெரிவிக்க கேட்டு இருந்தார்கள். அவர்களும் நேற்று (நேற்று முன்தினம்) பதில் தெரிவித்து இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் வெகு விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என்று நாங்கள் காத்து இருக்கிறோம். கட்சி ரீதியாக நாங்கள் எடுக்கும் நடவடிக்கை தேர்தல் ஆணையம், மக்கள் மன்றத்தை சார்ந்து இருக்கிறது.

மீண்டும் ஒரு முறை சட்டசபை கூடத்தான் போகிறது. அப்போது பல்வேறு நிகழ்வுகள் நடக்கும். நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 பேர் மாற்றி வாக்களித்து இருந்தால் இன்றைக்கு நிகழ்வுகள் வித்தியாசமாக இருந்திருக்கும்.

அவர்களுடைய மனசாட்சி தொடர்ந்து தட்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்து கொண்டு இருக்கிறோம். எண்ணற்ற வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. அம்மாவின் ஆன்மா அ.தி.மு.க.வை ஒரு குடும்பத்தின் பிடியின் கீழ் செல்ல என்றுமே அனுமதிக்காது.

மர்மம் விலக வேண்டும்

கேள்வி:– ஜெயலலிதா மறைவில் இருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வர நீங்கள் நடத்தும் உண்ணாவிரதம் காலம் தாழ்ந்து இருக்கிறது. இருந்தாலும் வரவேற்பதாக மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். அதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:– அது அவருடைய கருத்து. எங்களை பொறுத்தவரையில், அவருடைய வரவேற்பையும், எதிர்ப்பையும் எண்ணி நாங்கள் இந்த உண்ணாவிரதத்தை அறிவிக்கவில்லை. அம்மாவின் ஆன்மா உந்துதல் காரணமாக அறிவித்து இருக்கிறோம். தமிழக மக்கள் அனைவரும் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மம் விலகவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

பதவி விலக வைக்கப்பட்டார்

கேள்வி:– ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு 2 மாத காலம் ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக இருந்தார். அப்போதெல்லாம் மரணத்தை பற்றி கேள்வி எழுப்பாமல், இப்போது அவர் எழுப்புவது அரசியல் நாடகம் என்று குற்றச்சாட்டு உள்ளதே?

பதில்:– ஓ.பன்னீர்செல்வம் 2 மாத காலம் முதல்–அமைச்சராக இருந்தபோது கூட ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார். அப்படி அவர் எடுத்ததன் காரணமாகத்தான் பதவி விலக வைக்கப்பட்டார். இந்த வி‌ஷ வித்துகளை விதைக்க வேண்டாம்.

கேள்வி:– தீபா பேரவையின் செயல்பாடு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருக்கிறதா? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:– அவரை வரவேற்கிறோம். இரு கரங்களாக நாங்கள் செயல்படுவோம் என்று அவர் கூறினார். அதை இன்றும் நினைவு கூருகிறோம். எங்களை பொறுத்தவரையில் ஒரே இயக்கமாக அ.தி.மு.க. இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பிரிவினை என்ற ஒன்று வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். தீபா மற்றும் அவர் பின்னால் இருப்பவர்கள் அனைவரும் கழகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்று செயல்பட வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். ஒரு கட்டத்தில் அவர்கள் இதை உணர்ந்து எங்களுடன் வருவார்கள் என்று நம்புகிறோம்.

நினைத்தது கிடையாது

கேள்வி:– 6 பேர் எதிராக வாக்களித்து இருந்தால் வித்தியாசமாக இருந்து இருக்கும் என்றும், அடுத்த சட்டமன்ற கூட்டத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கமாட்டார்கள் என்றும் சொல்கிறீர்கள். இதை வைத்து பார்க்கும்போது 6 பேரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ அவர்களுக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்பு உள்ளதா?

பதில்:– கண்டிப்பாக ரகசிய வாக்கெடுப்பு என்று வந்தால், 6 பேர் என்ன? 60 பேர் கூட வாக்களிப்பார்கள். ரகசிய வாக்கெடுப்பு என்பதுதான் முறையான விதம். அதற்கு என்ன பயம் இருக்கிறது என்பதை அந்த தலைமைதான் விளக்க வேண்டும். ஜெயலலிதாவின் அரசு கவிழவேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்தது கிடையாது. அ.தி.மு.க. அரசு ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில் அமையவேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து.

ராதாரவிக்கு பதில்

கேள்வி:– தி.மு.க.வில் சேர்ந்த நடிகர் ராதாரவி, அ.தி.மு.க. என்ற கட்சியே தமிழகத்தில் இல்லை என்று கூறி இருக்கிறாரே?

பதில்:– அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய ஆலமரம். இதில் பலரும் வந்து இருக்கிறார்கள். சென்றும் இருக்கிறார்கள். ஒரு கோடியே 60 லட்சம் உறுப்பினர்களை கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான். ஜெயலலிதாவின் கண் அசைவுக்கு கட்டுப்பட்டு முழு தமிழகமே இருந்த காலம் வெகுநாள் சென்றுவிடவில்லை. அவருடைய முழு புகழை முன்னோக்கி கொண்டு சென்றவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் பின்னால் நாங்கள் அணிவகுத்து இருக்கிறோம்.

இப்போது ஏற்பட்டு இருக்கும் மக்கள் எழுச்சியை ராதாரவி பார்க்கவேண்டும். அ.தி.மு.க. பிளவுபட்டு கிடப்பதால் தி.மு.க. வந்துவிடும் என்ற எண்ணம் மிகப்பெரிய தவறு. எந்த ஒரு அ.தி.மு.க. தொண்டனும் இந்த கருத்தை ஏற்று கொள்ளமாட்டான்.  இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Next Story