டிஸ்சார்ஜ் அறிக்கையில் தகவல் ஜெயலலிதா கீழே தள்ளி விடப்பட்டார் பி.எச்.பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு


டிஸ்சார்ஜ் அறிக்கையில் தகவல் ஜெயலலிதா கீழே தள்ளி விடப்பட்டார் பி.எச்.பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 March 2017 2:13 PM IST (Updated: 2 March 2017 2:12 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா கீழே தள்ளி விடப்பட்டார் என டிஸ்சார்ஜ் அறிக்கையில் தகவல் இருப்பதாக பி.எச்.பாண்டியன் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்


சென்னை,

அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ்பாண்டியன் ஆகியோர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது ஜெயலலிதா மரணம் குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டனர். அவர்கள் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா மறைவு தொடர்பான மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையில் அவர் கீழே தள்ளி விடப்பட்டார் என குறிப்பிடப் பட்டுள்ளது. மருத்துவமனையில் 27 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் அகற்றப்பட்டு உள்ளது. இந்த கேமராக்களை அகற்றுவதற்கு உத்தரவிட்டது யார்? என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

புரட்சித்தலைவியின் போயஸ்கார்டன் வீட்டில் சி.சி. டி.வி. கேமராக்கள் உள்ளன. அதில் புரட்சித்தலைவி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்படும் காட்சிகள் பதிவாகி இருக்கும். அதை வெளியிட வேண்டும்.

புரட்சித்தலைவிக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையை மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. உடனே எய்ம்ஸ் அறிக்கையை வெளியிட வேண்டும்.

புரட்சித்தலைவியை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளிப்பதற்காக டெல்லியில் இருந்து ஏர்ஆம்புலன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து இருக்கிறது.

ஆனால் சிங்கப்பூருக்கு அவரை அழைத்துச் செல்லவில்லை. அவரை சிங்கப்பூருக்கு அழைத்து செல்லாதது ஏன்? அதை தடுத்து நிறுத்தியது யார்?

புரட்சித்தலைவி ஆஸ்பத்திரியில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார் என்று அறிக்கை கொடுத்தனர். இதுபோன்ற உயர் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் பிரமுகருக்கு அளிக்கப்படும் உணவு அங்குள்ள ஆய்வு கூடத்தில் சோதனை செய்த பிறகே வழங்கப்படும். அந்த ஆய்வுக்கூட சோதனை அறிக்கையை வெளியிட வேண்டும்.

புரட்சித்தலைவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிறகு நவம்பர் 2-ந் தேதியில் இருந்து டிசம்பர் 5-ந்தேதி வரை வெளிநாட்டு டாக்டர்கள் வரவில்லையே ஏன்? அவருக்கு எக்மா  அவரது கன்னத்தில் 4 துளைகள் இருப்பதை காண முடிந்தது. அது பிளாஸ்திரி ஒட்டப்பட்டதன் அடையாளம் என்று மருத்துவமனை தெரிவித்து இருந்தது. இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இடைத்தேர்தல் நடந்தபோது வேட்பாளர் அத்தாட்சி மனுவில் புரட்சித்தலைவியின் கைரேகை வைக்கப்பட்டது. அப்போது உடனிருந்த பாலாஜி என்பவர் விசாரிக்கப்பட வேண்டும். மேற்கொண்டு அவரிடம் கைரேகை பெறப்பட்டதா? என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

தலைசிறந்த அப்பல்லோ மருத்துவமனையில் மிகச் சிறந்த பிசியோதெரபிஸ்டுகள் உள்ள நிலையில் சிங்கப் பூரில் இருந்து பிசியோ தெரபிஸ்டுகளை ஏன் வர வழைக்க வேண்டும். இதற்கு உத்தரவிட்டது யார்?

ஜெயலலிதாவுக்கு என்.எஸ்.ஜி. பாதுகாப்பு இருக்கிறது. அவர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.) அங்கு இல்லை. இதனால் சில குடும்ப உறுப்பினர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் உலா வந்துள்ளனர். அவர்கள் பற்றிய விவரங்களை வெளிப் படுத்த வேண்டும். நாட்டு மக்களுக்கு உண்மைகளை விளக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story