புதிய அமைப்பு தொடங்கிய தீபாவுக்கு ஆதரவு குறைகிறதா?


புதிய அமைப்பு தொடங்கிய தீபாவுக்கு ஆதரவு குறைகிறதா?
x
தினத்தந்தி 3 March 2017 5:15 AM IST (Updated: 3 March 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

புதிய அமைப்பு தொடங்கிய தீபாவின் வீட்டுக்கு தொண்டர்களின் வருகை குறைந்துள்ளது. நிர்வாகிகள் மட்டுமே கணிசமான அளவில் வருகின்றனர்.

சென்னை,

ஜெயலலிதா இறந்த பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என அ.தி.மு.க தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்னை தியாகராயநகரில் உள்ள தீபாவின் இல்லத்திற்கு சென்று அரசியலுக்கு வரும்படி கூறி வந்தனர்.

இந்தநிலையில், தொண்டர்களின் விருப்படி ஜெயலலிதாவின் பிறந்தநாளான கடந்த 24–ந்தேதி தீபா, ‘எம்.ஜி.ஆர்–அம்மா–தீபா பேரவை’ என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பை தொடங்கினார். பேரவைக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்துடன் கூடிய புதிய கொடியையும் அறிமுகம் செய்தார். அதன் பின்பு பேரவையின் நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட்டார்.

எதிர்ப்பு

இந்த நிர்வாகிகள் பட்டியலில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறி தொண்டர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரவையின் உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

இதனால் தீபாவின் கணவர் மாதவன் தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். அதனை தொடர்ந்து வேறொரு நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.

கருத்து வேறுபாடு

இந்தநிலையில் தீபா பேரவையில் ஒரு தரப்பினர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தீபா இணைந்து அரசியல் பயணத்தை தொடர வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் தீபா தனியாகவே அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறிவருகின்றனர்.

இதனால் தீபா பேரவையின் தொண்டர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே தீபா தொண்டர்களை சந்தித்து வருகிறார். மற்ற நாட்களில் தொண்டர்களை சந்திப்பதில்லை.

தொண்டர்கள் வருகை குறைந்தது

நேற்று தீபா வீட்டில் தொண்டர்களின் வருகை வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது. பேரவை நிர்வாகிகள் மட்டுமே சிலர் வந்து சென்றனர்.

இந்த நிலையில் பேரவையின் மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க மூத்த அரசியல் தலைவர்கள் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு மாவட்டம் வாரியாக தொண்டர்களின் கருத்துகளை கேட்டு நிர்வாகிகள் பட்டியலை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story