கிரானைட் முறைகேடு: மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்


கிரானைட் முறைகேடு:  மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 3 March 2017 1:04 AM IST (Updated: 3 March 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கிரானைட் முறைகேடு குறித்து எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

மதுரையில் சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகள் செயல்படுவதாகவும், தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதாகவும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2014–ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மதுரை கிரானைட் குவாரி முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்து உத்தரவிட்டது. அவரும் விசாரணை நடத்தி 2015–ம் ஆண்டு நவம்பர் 23–ந்தேதி அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

நடவடிக்கை

அந்த அறிக்கையில், ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அமைக்க வேண்டும். இந்த முறைகேடுக்கு உதவிய மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சகாயம் கூறியிருந்தார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனுதாக்கல் செய்ய ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. ஒவ்வொரு முறையும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, பதில் மனு தாக்கல் செய்ய அரசு வக்கீல்கள் காலஅவகாசம் கேட்டு வந்தனர்.

கால அவகாசம்

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துக்குமாரசாமி, ‘சகாயம் அறிக்கை தமிழக அரசின் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய 6 வாரம் அவகாசம் வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

நிபுணர்கள் குழு

இந்திய கிரானைட் மற்றும் கல் தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘கடந்த 17 ஆண்டுகளில் கிரானைட் குவாரிகள் மூலம் ரூ.52 ஆயிரம் கோடி அளவுக்குத்தான் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தனது மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவருடைய மதிப்பீடு தவறானது.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிபுணர்கள் அடங்கிய புதிய குழுவை அமைத்து, மீண்டும் துல்லியமாக விசாரணை நடத்த வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

ஒருங்கிணைந்த அறிக்கை

இதையடுத்து நீதிபதிகள், ‘ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் அறிக்கை மீது மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பது குறித்து 6 வார காலத்திற்குள் ஒருங்கிணைந்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.  பின்னர் விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.


Next Story