ஐகோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் இறங்கி மாணவர்கள் போராட்டம்


ஐகோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் இறங்கி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 March 2017 2:25 AM IST (Updated: 3 March 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் இறங்கி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

நெல்லையை அடுத்த கங்கைகொண்டானில் உள்ள குளிர்பான ஆலைகள், தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி மாணவர்கள் உடனடியாக போராட்டத்தில் இறங்கினார்கள்.

அவர்கள் நெல்லை கொக்கிரகுளம் பகுதியில், தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். குடிதண்ணீருக்கே தட்டுப்பாடு நிலவுகிற நிலையில், தாமிர பரணி தண்ணீரை குளிர்பான நிறுவனங்களுக்கு தரக்கூடாது என்ற தங்கள் கோரிக்கையை அவர்கள் முழங்கினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நெல்லை டவுன் போலீஸ் உதவி கமிஷனர் மாரிமுத்து மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

பால் ஊற்றி போராட்டம்

இதேபோல் இந்து மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் உடையார், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் முன்பு தாமிரபரணி ஆற்றுக்கு பால் ஊற்றி போராட்டம் நடத்தினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தற்போது குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் சிந்துபூந்துறை, வண்ணார்பேட்டைபகுதியில் கூட தினமும் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தினமும் 96 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் அந்த நிறுவனங்கள் உபரிநீரை மட்டும் எடுத்துக்கொள்வதாக கூறி அனுமதி கேட்டுள்ளது. குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் உபரி நீர் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. எனவே வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க, குறைந்தபட்சம் இந்த கோடைக்காலம் முடிவடையும் வரையிலாவது தடை விதிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story