நெடுவாசலில் போராட்டம் தொடரும் போராட்டக்குழு அறிவிப்பு


நெடுவாசலில் போராட்டம் தொடரும் போராட்டக்குழு அறிவிப்பு
x
தினத்தந்தி 3 March 2017 10:15 PM GMT (Updated: 3 March 2017 7:32 PM GMT)

நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடும்வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்குழு அறிவித்துள்ளது.

வடகாடு, 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் கடந்த 16-ந் தேதி முதல் சுற்றுவட்டார 100 கிராமங்களை சேர்ந்த மக்கள் அறவழியில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுதவிர ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ள சில இடங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்துக்கு 100 கிராமங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் போராட்ட குழுவாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் 1-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்று முதல்-அமைச்சர் உறுதி அளித்தார். எனவே போராட்ட குழுவினர், போராட்டத்தை தொடருவதா? என்பது பற்றி கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றனர்.

ஆலோசனை கூட்டம்

அதன்படி போராட்ட குழுவினரின் ஆலோசனை கூட்டம் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே போராட்ட களத்தில் இருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் “மத்திய அரசு நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும்வரை நாங்கள் ஓயமாட்டோம். அதுவரை போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தனர்.

நெடுவாசலில் நேற்று 16-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. வழக்கம்போல் உற்சாகத்துடன் இளைஞர்கள், கிராம மக்கள், பெண்கள் என அனைத்துதரப்பினரும் நேற்றைய போராட்டத்திலும் பங்கேற்றனர். நேற்று அங்கு மழை பெய்தபோதும் மழையில் நனைந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர் அன்புமணி

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி டி.ராஜா எம்.பி., மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், நடிகர் பெப்சி விஜயன் ஆகியோர் நேற்று நெடுவாசலுக்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

போராட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இங்கு கொண்டுவர விடமாட்டோம். சோறு போடும் இந்த பூமியை நாம் பாதுகாத்து அடுத்த சந்ததியினருக்கு விட்டுச் செல்லவேண்டும். மத்திய அரசு, இயற்கை வளங்களை அழிக்கிற அனைத்து திட்டங்களையும் தமிழகத்திற்கு தான் கொண்டு வருகிறது. மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தபோது மீத்தேன் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டு, இப்போது அரசியல் ஆதாயத்துக்காக போராடுகிறார்.

காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அப்போது தான் இந்த பகுதிக்குள் எந்த நிறுவனமும் நுழைய முடியாது. 9-ந் தேதி கூடும் பாராளுமன்ற கூட்டத்தில் நெடுவாசல் பிரச்சினை குறித்து பேசுவேன். பாராளுமன்றத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்துவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

போராட்டம் தொடரும்

இதன் காரணமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது. இதுகுறித்து போராட்டக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறுகையில், “நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட்டு விட்டோம் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.

Next Story