நடிகர் தனுஷ் மனு தாக்கல் அடுத்த மாதம் 18-ந்தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு
மேலூர் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்கக்கோரி நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்தார்.
மதுரை,
மேலூர் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்கக்கோரி நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை அடுத்த மாதம்(ஏப்ரல்) 18-ந்தேதிக்கு மாஜிஸ்திரேட்டு தள்ளிவைத்தார்.
மேலூர் தம்பதி வழக்கு
மேலூர் தாலுகா மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 65). இவரது மனைவி மீனாள் என்ற மீனாம்பாள். இவர்கள், நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், அவரை பலமுறை சந்திக்க முயன்றும் முடியவில்லை என்றும், தாங்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மாதம் தோறும் தங்களுக்கு ரூ.65 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க தனுசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை எதிர்த்து நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். ஐகோர்ட்டு உத்தரவுப்படி தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவரது அங்க அடையாளங்களை டாக்டர் கள் குழுவினர் சரிபார்த்தனர். இந்தநிலையில் நடிகர் தனுசுக்கு மரபணு பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று மேலூர் தம்பதியினர் ஐகோர்ட்டில் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.
ஆஜராக விலக்கு கோரி மனு
இந்த வழக்கு விசாரணையின் போது, மேலூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தனுஷ் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதன்பின்பு, மேலூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ள தனுஷ் மீதான வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு தடை விதித்தது.
இந்தநிலையில், மேலூர் கோர்ட்டில் கதிரேசன்-மீனாம்பாள் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கதிரேசன்-மீனாம்பாள் தம்பதியினர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். தனுஷ் தரப்பில் ஆஜரான வக்கீல் இருளப்பன், இந்த வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளதாக கூறி அதற்கான உத்தரவு நகலை தாக்கல் செய்தார்.
இதன்பின்பு, மேலூர் கோர்ட்டில் விசாரணையின் போது நடிகர் தனுஷ் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை அடுத்த மாதம்(ஏப்ரல்) 18-ந்தேதிக்கு மாஜிஸ்திரேட்டு செல்வக்குமார் தள்ளிவைத்தார்.
Next Story