கடந்த ஆண்டு பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகளில் 2-வது, 3-வது இடங்களை பெற்ற மாணவர்களுக்கு காசோலைகள்-சான்றிதழ்கள்
கடந்த ஆண்டு பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகளில் 2-வது, 3-வது இடங்களை பெற்ற மாணவர்களுக்கு காசோலைகள் - சான்றிதழ்களை முதல்-அமைச்சர் வழங்கினார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாணவ-மாணவிகள்
பள்ளிக்கல்வித்துறை, சமூகநலம் மற்றும் சத்துணவுதிட்டத் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகளால் நடத்தப்படும் பள்ளிகளில் பயின்று 2015-2016-ம் கல்வியாண்டில், பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் தமிழை ஒரு மொழி பாடமாகக் கொண்டு மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற 21 மாணவ-மாணவியருக்கு தலா 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 22 மாணவ-மாணவியருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளும், அதேபோன்று 10-ம் வகுப்பு அரசுபொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற 69 மாணவ-மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 424 மாணவ-மாணவிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது.
காசோலைகள்-சான்றிதழ்கள்
அவற்றில் தற்போது, சென்னை மாவட்டதைச் சார்ந்த 7 மாணவ-மாணவியர்களுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.
பிற மாவட்டங்களைச் சார்ந்த மாணவ-மாணவியர்களுக்கு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களால் காசோலைகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story