தாம்பரம் விமானப்படை பிரிவுகளுக்கு விருது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்
தாம்பரம் விமானப்படை தளத்தில் உள்ள பிரிவுகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.
சென்னை,
இந்திய பாதுகாப்புப் படையில், நவீன தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் போர்க்கால பயிற்சி ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் படைப் பிரிவுகளுக்கு ஆண்டு தோறும் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இந்த விருதை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளம் பெற்றுள்ளது. இங்குள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ என்று அழைக்கப்படும் 125 ரக ஹெலிகாப்டர் பிரிவு மற்றும் எம்.டி.ஐ. என்ற மெக்கானிக்கல் பயிற்சி மையம் ஆகியவற்றுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று தாம்பரம் விமானப்படை தளத்தில் நடந்தது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-
இந்திய விமானப்படையைச் சேர்ந்த மிகவும் பழமையான அமைப்பில் ஒன்றான தாம்பரம் விமான படைத்தளத்துக்கு வந்து, இங்குள்ள இந்த 2 பிரிவுகளுக்கும் கொடி உள்ளிட்ட கவுரவத்தை வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த 2 பிரிவுகளுக்குமே போற்றத்தக்க வரலாறு உண்டு.
பாரம்பரியம், சிறப்பான செயல்பாடு, பொதுநல நோக்கிலான தேச சேவை ஆகியவை இந்த பிரிவுகளுக்கு உண்டு. தேசத்தின் மீது மிளிரும் பக்தி, தொழில் ஈடுபாடு, பண்பாடு, தைரியம் ஆகிய இந்த தன்மைக்காக இந்த இரண்டு பிரிவுகளும் தேசிய அளவிலான கவுரவத்தையும் பாராட்டையும் பெறுகின்றன.
பதன்கோட் தாக்குதல்
பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ள நாடாக இந்தியா இன்று வளர்ந்து வருகிறது. மாறி வரும் சமூக, பொருளாதார நிலையிலும், அரசியல் சூழ்நிலைகளிலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப்பகை, இயற்கை சீற்றம் ஆகியவற்றிலெல்லாம் மக்களை பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்திய நமது பாதுகாப்புப் படைகள் முன்னிலையில் நிற்கின்றன.
உத்தரகாண்ட், காஷ்மீர் பள்ளத்தாக்கு, தமிழகம் ஆகிய இடங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரிடரின் போது இந்திய விமானப்படை செய்த உதவிகள் சிறப்புக்குரியவையாக உள்ளன.
பதன்கோட்டில் கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது, இந்தப்பிரிவு தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் தீவிரவாதத்தை ஒடுக்கியதோடு, சாவு எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தியது.
இந்த தேசமே இங்குள்ள வீரர்களால் பெருமை அடைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அணி வகுப்பு
இந்த நிகழ்ச்சிக்காக தாம்பரம் விமானப்படை தளம் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
அதன் முன்னால், 58 அதிகாரிகள் மற்றும் 426 வீரர்கள் அணி வகுத்து நின்றனர்.
விழாவுக்கு வருகை தந்த விமானப்படை பிரிவின் மூத்த அதிகாரிகள், முக்கிய விருந்தினர்களை மோட்டார் சைக்கிள் பிரிவினர் வரவேற்று, விழா நடைபெற்ற பகுதிக்கு அழைத்து வந்தனர். காலை 9.10 மணிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் வந்தார். தமிழக அரசின் சார்பில் நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் வருகை தந்தார்.
9.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வந்தார். அப்போது தேசியக்கொடி மற்றும் விமானப்படையில் கொடிகளை பறக்கவிட்டபடி, 3 ஹெலிகாப்டர்கள் தாழப் பறந்து வந்து அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் திறந்த ஜீப்பில் சென்று வீரர்களின் அணிவகுப்பை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பார்வையிட்டார்.
மலர் வெளியீடு
பின்னர் விமானப்படை தளத்தின் வரலாறு அடங்கிய மலரை ஜனாதிபதி வெளியிட்டார். பின்னர் விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட 28 வீரர்கள் துப்பாக்கியை சுழற்றியபடி செய்த சாகசங்கள், அங்கிருந்தவர்களை வெகுவாகக் கவர்ந்தன.
அடுத்ததாக 6 சூரிய கிரண் என்ற போர் விமானங்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அவை விழாப் பகுதியில் தாழ்வாக வெவ்வேறு வரிசைகளில் பறந்து வந்து பரவசப்படுத்தின. அனைத்து சாகச நிகழ்ச்சிகளையும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கைதட்டி ரசித்து மகிழ்ந்தார்.
Next Story