‘நீட்’ தேர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி 10-ந் தேதி ஆர்ப்பாட்டம் திருநாவுக்கரசர் அறிவிப்பு
நீட் தேர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் 10-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு
நாடு முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுக்கான (நீட்) விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் முடிவடைந்துள்ளது. இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை இணையதளத்தின் மூலம் அனுப்பியுள்ளனர். இதற்கான தேர்வு வருகிற மே 7-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் பரிந்துரையோடு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு ஜனவரி 31-ந் தேதி அனுப்பப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்கு எடுத்துக்கொண்ட சரியான முயற்சிகளைப்போல் தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது மிகுந்த வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது.
ஆர்ப்பாட்டம்
தமிழக மக்கள் மீது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணித்து மக்களின் கடும் சினத்திற்கு ஆளாகியுள்ள மத்திய பா.ஜ.க. அரசு, 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் வகையில் நுழைவுத் தேர்வை திணிப்பதை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வருகிற 10-ந் தேதி, காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் இணைந்து முன்னின்று நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story