ரூ.3 கோடி, 3 கிலோ தங்கம் வேண்டாம் என எங்கள் அணிக்கு வந்தவர் செம்மலை: ஓ.பன்னீர்செல்வம்
ரூ.3 கோடி, 3 கிலோ தங்கம் வேண்டாம் என எங்கள் அணிக்கு வந்தவர் செம்மலை என்று ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.
சென்னை,
அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியாக தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ளார்.
இன்று நாமக்கல், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, பாண்டிய ராஜன், நத்தம் விசுவநாதன், செம்மலை, எம்.பி.க்கள் மைத்ரேயன், பி.ஆர்.சுந்தரம், அசோக்குமார், சத்யபாமா, முன்னாள் எம்.பி.மனோஜ் பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் மத்தியில் பன்னீர் செல்வம் பேசியதாவது:- சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவை பார்த்ததாக செங்கோட்டையன் பொய் சொல்கிறார். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ரூ. 3 கோடி , 3 கிலோ தங்கம் வேண்டாம் என எங்கள் அணிக்கு வந்தவர் செம்மலை” இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் பேசும் போது, ”அ.தி.மு.க.வுக்கு சசிகலாவால்தான் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சசிகலாவுக்கு முதன்முதலில் எதிர்ப்பு குரல் கிளம்பியது கொங்கு மண்டலத்தில் தான். நாளுக்கு நாள் சசிகலாவுக்கு எதிர்ப்பு குரல் அதிகமாகி கொண்டே வருகிறது. எனவே சசிகலாவை கட்சியில் இருந்து ஓடஓட விரட்டுவோம். அ.தி.மு.க.வில் உள்ள துரோகிகளும் ஓரம் கட்டப்படுவார்கள்.
டி.டி.வி. தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். அவர் இன்று துணை பொதுச்செயலாளர் என்று சொல்லிக் கொள்கிறார். இவர் மீதும் வழக்குகள் உள்ளதால் விரைவில் அவர் ஜெயிலுக்கு செல்வார்.ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்கும் வகையில் விசாரணை கோரி மேற்கொள்ள உள்ள உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ்நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.உண்ணாவிரதத்துக்கு நாம் கேட்கும் இடத்தை தர போலீசார் அனுமதி மறுக்கிறார்கள். ஆனாலும் நமது போராட்டம் வெற்றி அடையும். தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும். இது உறுதி.” இவ்வாறு அவர் பேசினார்.
Next Story