அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை
கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் விழுப்புரம், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னை,
அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள டி.டி.வி. தினகரன் தினமும் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். நேற்று முன்தினம் கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர், டி.டி.வி. தினகரனை கட்சியின் தலைமை அலுவலகத்தில், விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து கட்சி பணிகள் குறித்து விவாதித்தனர். கட்சி பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது குறித்து அவர்களுக்கு, அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆலோசனைகளை வழங்கினார்.
ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்ற, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், செய்யார் நகரச் செயலாளர் ஜனார்த்தனம் ஆகியோர், தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, அ.தி.மு.க.வில் இணைந்தனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.