கமிஷன், ஊழலுக்கு இடம் அளிக்காத வகையில் டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும்
டெண்டர்களில் நூறு சதவீதம் வெளிப்படை தன்மைக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–வெளிப்படை தன்மை இல்லை
அ.தி.மு.க. அரசு அறிவித்த திட்டங்களில் பல இன்னும் செயல்பாட்டிற்கே வரவில்லையென்றாலும், துவங்கப்பட்ட திட்டங்களும் நிறைவேற்றப் படாமல் தேங்கி நிற்கின்றன. பாலங்கள், சாலைகள், குடிநீர் திட்டங்கள், அரசு அலுவலக கட்டிடங்கள் என்று அனைத்து வகையான திட்டங்களும் நிதி பற்றாக்குறையால் ஒரு புறமும், ஊழல்களால் இன்னொரு புறமும் திணறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அரசின் திட்டங்களை நிறைவேற்ற விடப்படும் டெண்டர்களில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை என்பது அ.தி.மு.க. ஆட்சியின் மிக முக்கிய முத்திரையாக மாறி விட்டது.
தி.மு.க. அரசு இருந்த போது அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய 1998–ல் சட்டம் கொண்டு வரப்பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர்கள் வழங்குவதில் ஒளிவு மறைவின்றி முடிவுகள் எடுக்கப்பட்டன. புதிய தலைமைச் செயலகம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் வெளிப்படைத்தன்மை நிறைந்த டெண்டர் நடைமுறைகளால் விடப்பட்டு நிறைவேற்றப்பட்டதை இந்த நேரத்தில் நினைவு கூர்வது சாலப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். டெண்டர்களில் வெளிப்படைத் தன்மை என்பது அ.தி.மு.க. ஆட்சியில் மருந்துக்குக் கூட இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன்டெண்டர் சட்டத்தில் உள்ள பிரிவுகளை ஆளுங்கட்சிக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை கொடுப்பதற்கு வளைக்கப்படும் சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. டெண்டர் படிவங்கள் கூட அமைச்சர்கள் சொல்லும் ஒப்பந்ததாரர்களுக்கோ அல்லது அ.தி.மு.க.வினர் விரும்புவோருக்கு வழங்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு, பல அரசு அலுவலகங்களிலும் அடிதடி வரை போன நிகழ்வுகள் எல்லாம் செய்திகளாக பத்திரிக்கைகளில் வெளிவந்தது. டெண்டர்களில் கொடுக்கப்பட வேண்டிய கமிஷன் பற்றியெல்லாம் பிளக்ஸ் போர்டுகள் வைத்தே பொதுப்பணித்துறை பொறியாளர்கள் போராட்டம் நடத்திய நிகழ்வுகள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் அரங்கேறியது.
ஆன்லைனில் டெண்டர்களை விட்டு வெளிப்படைத்தன்மைக்கு வழி வகுக்க வேண்டிய அ.தி.மு.க. அரசு, 100 சதவீதம் அந்த நடைமுறையை கடைப்பிடிக்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் பலவும் இன்னும் ஆன்லைன் டெண்டர் நடைமுறைக்கு வரவில்லை. இது தவிர ஆளுங்கட்சியினருக்கு டெண்டர்களை கொடுப்பதற்காக டெண்டர்களில் சிண்டிகேட் முறையும் தொடருகிறது என்ற குற்றச்சாட்டும் அரசு அதிகாரிகள் மத்தியிலேயே பரபரப்பான பேச்சாக இருக்கிறது.
நூறு சதவீதம்இந்த நிலையில் கூவத்தூரில் அடைத்து வைத்து அந்த சட்டமன்ற உறுப்பினர்களின் விசுவாசத்தை காப்பாற்றும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதையை அ.தி.மு.க. அரசுக்கு டெண்டர்களை விடுவதில் ஒரு வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதாகத் தெரியவில்லை. ஆன் லைனில் போடப்படும் டெண்டர்களைக் கூட புதுவகையான நிபந்தனைகளை புகுத்தி, புதிய சான்றிதழ் அப்லோடு செய்ய வேண்டும் என்றெல்லாம் காரணம் காட்டி ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் ஒப்பந்தங்களை வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ஆகவே பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகதாரத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளிலும் ஆன்லைன் டெண்டர்களில் நூறு சதவீத வெளிப்படைத்தன்மைக்கு புதிய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி செய்ய வேண்டும். அதே போல் அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகிய அனைத்து அரசு அலுவலகங்களிலும் நூற்றுக்கு நூறு சதவீதம் ஆன்லைனிலேயே டெண்டர் பெறும் நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
கஜனாவை காப்பாற்றுங்கள்டெண்டர் விடுவதில் உள்ள சிண்டிக்கேட் முறையை ஒழிக்கவும், ஆன்லைன் டெண்டர்களில் ஆளுங்கட்சி விரும்பும் ஒப்பந்ததாரர் மட்டுமே பணிகளை எடுக்க முடியும் என்ற நிலையையும் மாற்றி, அரசு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பணிகள் வெளிப்படைத் தன்மையுடனும், கமிஷனுக்கும், ஊழலுக்கும் இடமளிக்காத வகையிலும் டெண்டர்கள் கோருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ, அ.தி.மு.க.வின் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ முதல்–அமைச்சர் பதவியை பயன்படுத்தி செயல்படாமல், ஊழலுக்கு இடமில்லாத வகையில் டெண்டர்களை முடிவு செய்து தமிழக அரசின் கஜானாவை காப்பாற்றும் ஒரே நோக்கத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.