பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை; அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போராட்ட குழு ஆலோசனை


பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை; அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போராட்ட குழு ஆலோசனை
x
தினத்தந்தி 5 March 2017 5:45 AM IST (Updated: 5 March 2017 3:51 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

மதுரை,

நெடுவாசலிலும் அதை சுற்றியுள்ள சில ஊர்களிலும் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேசுடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கோட்டைக்காடு என்ற இடத்தில் நடைபெற்று வந்த போராட்டம் நேற்றுமுன்தினம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. மாவட்ட கலெக்டர் கோட்டைக்காடு போராட்டக் குழுவினருடன் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் பேசி குத்தகைதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட குத்தகை நிலங்களை 9 மாதங்களுக்குள் சுத்தம் செய்து கொடுப்போம் என்று கலெக்டர் உறுதி அளித்ததை ஏற்று, போராட்டத்தை அவர்கள் நிரந்தரமாக வாபஸ் பெற்றனர்.

ஆனால் நெடுவாசலிலும் மற்ற ஊர்களிலும் நேற்று 17–வது நாளாக போராட்டம் நீடித்தது.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்

இந்தநிலையில், போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மதுரை வருவதாக அறிவித்து இருந்தார்.

இதையொட்டி, நேற்று மதியம் 3.30 மணியளவில் போராட்டக் குழுவை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் என 60 பேருக்கும் மேற்பட்டோர் மதுரை வந்தனர். அவர்கள் அனைவரும் அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு கூடினர்.

மாலை 5.30 மணிக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அங்கு வந்தார். அதன்பின்னர், ஓ.என்.ஜி.சி. நிறுவன மண்டல மேலாளர் பவன்குமார் உள்பட 4 அதிகாரிகளும் வந்தனர்.

முத்தரப்பு பேச்சுவார்த்தை

மாலை 6 மணியளவில் ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகளுடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சுமார் 30 நிமிடம் ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு, பொன்.ராதாகிருஷ்ணன், ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள், போராட்டக் குழுவினர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது போராட்டக் குழுவினர், கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை மத்திய மந்திரியிடம் வழங்கினார்கள்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை

இரவு 9.40 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்தது. பேச்சுவார்த்தையின் போது, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் கைவிடப்படும் என உறுதி அளிக்க வேண்டும் என்று போராட்டக்குழுவினர் கூறினார்கள். அதற்கு மந்திரியும், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் குழுவினரும், இதுபற்றி டெல்லியில் பேசி முடிவை தெரிவிக்கிறோம் என்று தெரிவித்தனர். இதை போராட்ட குழுவினர் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

ஆலோசனை

இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போராட்ட குழுவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்தை வழிநடத்த பல்வேறு கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் 25 பேர் கொண்ட புதிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.


Next Story